×

பண மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட் மதுரை கிளை.!

மதுரை:  பண மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது. ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் விசாரணையானது நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த நீதிமணி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சதுரயுகவள்ளி நகரை சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் இந்த வழக்கில் நீதிமணியின் மனைவி மேனகாவும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நீதிமணி தாங்கள் வசூலித்த பணத்தின் மூலம் தருண் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் ஆரம்பித்து, அதன் மூலம் காப்பான், மகாமுனி, தடம், மிஸ்டர் லோக்கல் ஆகிய தமிழ்படங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக 7ஜி சிவா, வினியோகஸ்த,ர் சென்னை முருகானந்தம், ஸ்டூடியோ கிரீன் உரிமையாளரும், படதயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா ஆகியோர் மூலம் சினிமாவில் முதலீடு செய்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதன் அடிப்படையில் 7ஜி சிவா, முருகானந்தம், ஞானவேல்ராஜா ஆகியோரை ராமநாதபுரம் பஜார் போலீசார் பண மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதன் பின்னர் போலீசாரால் 3வருக்கும் கடந்த மாதம் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நி்லையில் இந்த சம்மனுக்கு ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு ஞானவேல்ராஜா, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஆகஸ்டு 7ம் தேதி ராமநாதபுரம் போலீசில் நேரில் ஆஜராகுமாறும், தவறினால் காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது. இதன் பின்னர், இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என்பதற்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முன்ஜாமின் வழங்கக்கோரி வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது, கடந்த ஆண்டு மகாமுனி என்ற சினிமா தயாரித்தோம். இந்த படத்தின் தியேட்டர் உரிமையை நீதிமணி என்பவர் பங்குதாரராக இருந்த தருண் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றது.

இதற்காக ரூ.6 கோடியே 25 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டது. முதல்கட்டமாக ரூ.2 கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டது. மீத தொகையை கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதனால் அந்த நிறுவனம் மீது சினிமா துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரம் போலீசார் அனுப்பிய நோட்டீஸ் எனக்கு கிடைத்தது. இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அதாவது நிதி நிறுவனத்துக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக ராமநாதபுரத்தை சேர்ந்த துளசிமணிகண்டன் என்பவர் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரில் நீதிமணி மற்றும் சிலருடன் என் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்பேரில் என் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் எனக்கும் இந்த மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதற்கிடையே நான் ரூ.300 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

எனக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே ராமநாதபுரம் பஜார் போலீசார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கியும், போலீசார் முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையானது தற்போது நீதிபதி பாரதிதாசன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காவல் துறையினர் விசாரணைக்கு அழைக்கும்போது ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறி, ஞானவேல்ராஜாவுக்கு முன்ஜாமின் வழங்கினார்.

Tags : Gnanavelaraja ,branch ,ICC ,Madurai , The Madurai branch of the ICC has granted preliminary bail to filmmaker Gnanavelaraja in a money laundering case.
× RELATED போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர்...