×

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நேரடி விசாரணை! - வழக்கறிஞர்களையும் அனுமதிக்க கோரிக்கை!!!

சென்னை:  சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 மாதங்களுக்கு பின்னர் நேரடி விசாரணை தொடங்கியது.  கொரோனா ஊரடங்கு காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வகையான சேவைகள் முடக்கப்பட்டன. கல்வி நிலையங்கள், பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதை போன்று, நீதிமன்றத்தில் நேரடி விசாரணையும் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அரசு அளித்த தளர்வுகளின் அடிப்படையில் வீட்டில் இருந்தபடியே வழக்குகளை விசாரிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 5 மாதங்களாக நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இதனிடையே தற்போது கொரோனா பரவல் சற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் வழக்குகளை நேரடியாக விசாரிக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான மூத்த நீதிபதிகளை கொண்ட ஐகோர்ட்டு நிர்வாகக்குழு முடிவு செய்து அறிவித்தது. இதன் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 மாதங்களுக்கு பின்னர் தற்போது நேரடி விசாரணையானது தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 அமர்வுகளும் வழக்குகளை நேரடியாக இன்று முதல் விசாரித்து வருகின்றனர். பிற வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிபதிகள் காணொளி காட்சி மூலம் வழக்குகளை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் வழக்கில் ஆஜராக ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், பெரும் சிக்கல் எழுவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் நீதிமன்றத்திற்குள் அனைத்து வழக்கறிஞர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக வழக்கறிஞர்கள் கருப்பு நிற கவுன் கோட் அணியாமல், கழுத்துப்பட்டை மட்டும் அணிந்து வழக்குகளில் ஆஜராகி வருகின்றனர்.Tags : Judges ,Chennai ,High Court ,lawyers , Judges live hearing in High Court after 5 months in Chennai! - Request to allow lawyers too !
× RELATED அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது...