×

ஊரடங்கு தளர்வுக்கு பின்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத விசைத்தறி தொழில்: தொழிலாளர்கள் வேதனை

சோமனூர்: கோவை திருப்பூர் மாவட்டத்தில் 2.50 லட்சம்  விசைத்தறி கூடங்கள் உள்ளன. ஆனால் தற்போது இதில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறிகள் மட்டுமே இயங்கி வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றாலும் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் கிடைக்காததாலும், மேலும் உற்பத்தியான துணிகளும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாலும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் விசைத்தறி தொழில் மந்த நிலையில் உள்ளது. இதனால் விசைத்தறி சார்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து வேதனையில் உள்ளனர். கோவை திருப்பூர் மாவட்டத்தில் சாதாரண விசைத்தறிகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதால் அதை நம்பி 5 லட்சம்  தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாக அமலான ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தொழில்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. ஆனால் விசைத்தறி தொழில் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பமுடியாத நிலையிலேயே உள்ளது.

விசைத்தறி தொழிலுக்கு தேவையான நூல் பஞ்சு கிடைப்பது குறைவாக உள்ளது. சைசிங், பஞ்சாலை மில்கள் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் இருப்பதால் விசைத்தறிக்கு தேவையான நூல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனால் விசைத்தறியாளர்கள் பலரும் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். மேலும் உற்பத்தியான விசைத்தறி காடா துணிகள் விற்பனையாகாமல் அந்தந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களிடம் இருப்பில் வைத்துள்ளனர். குறிப்பாக வட மாநிலத்திற்கு விற்பனை செய்யக்கூடிய உற்பத்தி ரகங்கள் விற்பனையாகாமல் முழுவதுமாக தேங்கியுள்ளது. மீட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அசல் விலையிலிருந்து குறைத்து கேட்பதால் உற்பத்தியான காடா துணிகளை விற்பனை செய்யாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களுடைய சொந்த கூடங்களில் இருப்பு வைத்து வருகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஜவுளி துணிகள் தொடர்ந்து தேக்கம் அடைந்து வருகின்றன. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறியாளர்களுக்கு கூலி கொடுப்பதிலும்,  விசைத்தறியாளர்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் பெருத்த சிரமம் ஏற்படுகிறது.

 இது குறித்து சோமனூர் விசைத்தறி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது குறைந்த அளவிலேயே வழங்கக்கூடிய பாபு நூல்களைப் பெற்று உற்பத்தி செய்யக் கூடிய குறைந்த அளவிலான காடா துணிகளையும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கிடப்பில் வைத்துள்ளனர். அதனால் தங்களுக்கு வழங்கக்கூடிய கூலி முழுமையாக கிடைப்பதில்லை. அதிலும் பிடித்தம் போக வழங்கக் கூடியதை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கூட தட்டுப்பாடு ஏற்படுகின்றது. விசைத்தறி கூடத்திற்கு வாடகை, வரிகளுக்கு வங்கிக்கடன் வட்டி, மின் கட்டணம் போன்ற செலவுகளை சமாளிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் விசைத்தறி தொழிலை நம்பி வாழ்க்கையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது’’ என்றார்.


Tags : After ,curfew ,relaxed, returning ,normal, Workers ,suffering
× RELATED தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு...