×

கொட்டோ கொட்டுனு கொட்டுது மணி...புதுச்சேரியில் குப்பை அள்ளும் பணியில் கோடிக்கணக்கில் ஊழல்

வில்லியனூர்:  புதுச்சேரி மாநிலம் சுற்றுலாத்தளத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக தனியார் நிறுவனத்திடம் டெண்டர் விடப்பட்டது. அப்ேபாது மக்கும் குப்பை,  மக்காத குப்பை என பிரித்து வாங்கி தனித்தனியாக கொட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கு ஒரு டன் குப்பைக்கு ரூ.2200 வீதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் குப்பைகளை பிரித்து வாங்கி தனித்தனியாக சேகரித்தால் ஒப்பந்தகாரருக்கு போதிய வருவாய் கிடைக்காது. ஆகவே அனைத்து குப்பைகளையும் பிரிக்காமல் அப்படியே சேகரித்து வந்தனர்.  

 இதனால் கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ரங்கசாமி ஒப்பந்தத்தை ரத்து செய்து ஒரு டன்னுக்கு ரூ.1600 வீதம் வழங்கி முடித்துக்கொண்டார். பிறகு மறு ஒப்பந்ததாரர்கள் வரும் வரை நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ளி சேகரித்து வந்தனர். இருப்பினும் புதுச்சேரி முழுவதும் குப்பை சேகரிப்பது என்பது சற்று கடினமாக இருந்து வந்தது. இதையடுத்து புதிதாக டெண்டர் விடப்பட்டது. அதில் பல பேர் போட்டியிட்டனர். அதில் பெங்களூரை சேர்ந்த பானுமூர்த்தி என்ற ஒப்பந்ததாரர் சுவட்ச்சத்தா கார்ப்பரேஷன் என்ற பெயரில் 15 ஆண்டுகளுக்கு புதுச்சேரியில் குப்பை சேகரிக்க டெண்டர் எடுத்தார்.  அதில் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி, அரியாங்குப்பம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆகிய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்க வேண்டும். அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வாங்கி தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். அவர்கள் ஒரு நாளைக்கு 400 டன் குப்பை சேகரிக்க வேண்டும்.

ஒரு டன் குப்பைக்கு ரூ.1860 வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் டன்னுக்கு 10 சதவீதம் அதிகமாக ெதாகை ஏற்றி வழங்கப்படும். புதுச்சேரி நகராட்சியில் 1500 தொழிலாளர்களும், உழவர்கரை நகராட்சியில் 1200 தொழிலாளர்களும், அரியாங்குப்பம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் 300 தொழிலாளர்களையும் வைத்து குப்பைகளை சேகரிக்க வேண்டும். மேலும், துப்புரவு பணியாளர்கள் வீதி, வீதியாக மற்றும் வீடுகள் தோறும் சென்று குப்பைகளை வாங்கி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்.   பிறகு தெருக்கள் மற்றும் சாலையின் முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகளை வைத்து குப்பைகளை சேகரிக்க வேண்டும். இதனை டெம்போ அல்லது காம்பெக்ட் லாரி ஆகியவற்றின் மூலம் அப்புறப்படுத்துவதற்காக 25 காம்பெக்ட், 600 டெம்போ கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மேலும், இரவு நேரங்களில் சாலையோரங்களை குப்பைகள் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். சாலையில் மண் இல்லாமல் சுத்தமாக வைக்க வேண்டும். மேலும் வாங்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை மறுசுழற்சி ெசய்வதற்காக தனித்தனியாக தரம் பிரித்து கொட்ட வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் சுவட்சத்தா கார்ப்பரேஷன் ெடண்டருக்கு கையொப்பமிட்டது.

 ஆனால் அவற்றை அந்நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை. மேலும் சில பகுதிகளில் தரம் பிரித்து வாங்கப்படும் குப்பைகளை தனத்தனியாக கொட்டாமல் குருமாம்பேட் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் ஒன்றாகவே கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகளை மறுசுழற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் மொத்தமாகவே சுமார் 600 பேர் தான் பணியில் உள்ளனர். சுமார் 14 காம்பெக்ட்டும், 75 டெம்போ தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கொரோனா காலத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு தரமான முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் கொரோனா பாதித்த வீடுகளுக்கு சென்று பயோமெட்ரி கழிவுகளை சேகரிக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகளை தனியாக கொண்டு சென்று அழிக்காமல் மற்ற குப்பைகளுடன் கொட்டி வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இறக்கும் நாய், மாடு, பன்றி போன்றவற்றை தனியாக எடுத்து சென்று புதைக்காமல் குப்பைகளுடன் ெகாட்டி வருவதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபயாம் உள்ளது.     

 புதுச்சேரியில் குப்பை அள்ளுவதாக கூறி மிகப்பெரிய ஊழல்களை செய்து வருகின்றனர். மேலும் மற்றொரு கம்பெனி ஒன்றுக்கு குப்பை கிடங்கில் சமன் செய்யும் டெண்டரில் கடந்த 20 மாதமாக மாதம் ரூ.78 லட்சம் கொடுத்து வந்த நிலையில் தற்போது புதிய டெண்டரில் ரூ.45 லட்சம் நிர்ணயம் ெசய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.30 லட்சம் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது. எனவே இந்த ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து சுவட்ச்சதா கார்ப்பரேஷன் ஒப்பந்தத்தை ரத்து செய்து மறு டெண்டர் விட வேண்டும் என சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குப்பையில் டன் கணக்கில் ஊழல்  
ஒரு வண்டியில் 600 கிலோ  வரை தான் குப்பை ஏற்ற முடியும். ஆனால் இவர்கள் கல் மற்றும் மண்ணை கலந்து  ஒரு வண்டியில் 1.5 டன் குப்பைகளை ஏற்றுகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது 9  டன் மண்ணை குப்பையுடன் கலந்து ஏற்றி மிகப்பெரிய ஊழலை செய்து வருகின்றனர்.  ஒரு டிராக்டருக்கு டன்னுக்கு ரூ.1300 வாடகை கொடுத்து விட்டு மீதம் உள்ள  தொகையை அபேஸ் செய்து வருகின்றனர். இதன் மூலம் மட்டும் மாதம் 3 லட்சம்  கமிஷன் கிடைக்கிறது. மாதந்தோறும் சுமார் ரூ.2 கோடியே 50  லட்சம் அரசிடம் இருந்து ஏமாற்றப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம்  கண்டுகொள்ளாமல் இருக்க குப்பை கிடங்கில் எடை போட்டு கண்காணிக்கும்  அதிகாரிகளுக்கு மாதந்தோறும் மாமூல் செல்கிறது.

அரசியல்வாதிகளின் வாயை அடைக்க...  
முந்தைய ஒப்பந்தத்தில் டிராக்டர்கள் உபயோகிக்க கூடாது என புதிய ஒப்பந்தம்  பெறப்பட்டது. ஆனால் சில முக்கிய அரசியல்வாதிகளின் வாயை மூடுவதற்காக  அவர்களுக்கு மட்டும் டிராக்டர் ஓட்டிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர்.  அவர்களுக்கு டன்னுக்கு ரூ.1300 வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 3 டன் குப்பை  ஏற்றி வருகின்றனர். மேலும் இந்த டிராக்டர்கள் அனைத்தும் எந்தவித உரிமம்  இல்லாமல் இயங்கி வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

போலி கணக்கு  
தற்போது கடந்த 5 ஆண்டுகளில் குப்பை ஒரு டன்னுக்கு ரூ. 2280 வீதம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  புதுச்சேரியில் ஒரு நாளைக்கு மொத்தமாகவே 200 டன் குப்பை தான் கிடைத்து  வருகிறது. ஆகையால் ஒப்பந்ததாரர் அரசுக்கு கணக்கு காட்டுவதற்காக கட்டிடத்தின்  கற்கள், மணல் போன்றவற்ைற ஏற்றி சென்று அதிகமாக போலியாக கணக்கு காட்டி  வருகிறது.

Tags : garbage collection work ,Puducherry , Kotto, kottunu , Corruption ,crores, Puducherry
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...