×

பொள்ளாச்சி,உடுமலை வழியே தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

உடுமலை:  கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொள்ளாச்சி,உடுமலை வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதமாக கோவை,திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களை விட்டு வெளியேறி குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற அவர்கள் அரிசிஆலை,செங்கல்சூளை, ஜவுளிக்கடை,நகைகடை,பனியன் கம்பெனி,சிறு,குறு தொழிற்கூடங்கள் என தாங்கள் பணியாற்றிய நிறுவனங்களில் பணியாற்றிட திரும்பி வர நினைக்கின்றனர். குறிப்பாக நெல்லை,தூத்துக்குடி,கன்னியாக்குமரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் பணி தேடி கோவை,திருப்பூர் நோக்கி சரக்கு வாகனங்களில் வந்து கொண்டிருக்கின்றனர்.

மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், இன்று(7ம்தேதி) முதல் மாவட்டங்களுக்கிடையே பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதையடுத்து தென் மாவட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலை தேடி கோவை,திருப்பூர்,பொள்ளாச்சி,காங்கயம்,உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரக் கூடும். பேருந்துகளை இயக்குவது போல கோவை சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்குவது போல கோவையிலிருந்து நெல்லை,கன்னியாக்குமரி,நாகர் கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் கூறுகையில், கோவை,பொள்ளாச்சி,உடுமலை வழியே இயக்கப்பட்டு வந்த திருச்செந்தூர் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டு 2 வருட காலமாகிறது. பகல் நேரத்தில் தூத்துக்குடி,நெல்லையில் இருந்து பழனி,உடுமலை,பொள்ளாச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பனியன்கம்பெனி,கோழிப்பண்ணை, கோழித்தீவனப்பண்ணை, விசைத்தறிக் கூடங்கள், எண்ணெய் ஆலைகள், சிறு,குறுந்தொழிற்கூடங்கள் உள்ளிட்ட எண்ணற்ற நிறுவனங்களில் காலிப்பணியிடம் நிரப்பப்படும். தீபவாளி பண்டிகைக்கு முன்னதாக கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து விடும் என்பதால், நெருக்கடியில் உள்ள பொருளாதார நிலை உயர வேலையாட்கள் அதிகம் தேவைப்படுவார்கள். எனவே பொது போக்குவரத்தின் ஒரு பகுதியாக தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கும், கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

Tags : districts ,Pollachi ,Udumalai , Pollachi, Udumalai,southern, districts Special ,request
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...