×

தொடர் மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்வு மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிப்பு

மஞ்சூர்: அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் மின் நிலையங்களில் கூடுதல் மின்சார உற்பத்தி  மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் 12நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா,  போர்த்திமந்து உள்பட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்படி மின் நிலையங்களில் மின்சாரம்  உற்பத்தி செய்யப் படுகிறது. இதில் குந்தா-60 மெகாவாட், கெத்தை-175, பரளி-180, பில்லுார்-100, அவலாஞ்சி-40, காட்டுகுப்பை-30,  சிங்காரா-150, பைக்காரா-59.2, பைக்காராமைக்ரோ-2, முக்குருத்தி மைக்ரோ-0.70, மாயார்-36, மரவகண்டி-0.75, என மொத்தம் 833.65,  மின்சாரம்  தயாரிக்கப்படுகிறது. மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை  விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளில் நீர் மட்டம்  பெருமளவு உயர்ந்தது. குறிப்பாக அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை  பெய்ததால் மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணை நிரம்பியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணை திறந்து விடப்பட்டது. இதை  தொடர்ந்து மழையின் தாக்கம் படி,படியாக குறைந்து இயல்புநிலை திரும்பியது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தினசரி பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய  துவங்கி நீண்ட நேரம் நீடிக்கிறது. இதனால் குந்தா, எமரால்டு உள்பட பெரும்பாலான அணைகளில் மீண்டும் நீர் வரத்து  அதிகரித்துள்ளது. அணைகளில் தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்து வருவதால் மின் நிலையங்களில் கூடுதல் மின்சார உற்பத்தி  மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : power stations , Water ,level, dams, continuous ,rains, power stations
× RELATED 30 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி மணல்...