×

தீ விபத்தால் சேதமான ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ரூ.50 லட்சத்தில் கடைகள் கட்டும் பணி

ஊட்டி: ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் தீ விபத்தால் சேதமடைந்த இடத்தில் புதிதாக ரூ.50 லட்சத்தில் கடைகள்  கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் 1300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த ஜூன் 22ம் தேதி நள்ளிரவு மார்க்கெட் வளாகத்தில் உள்ள சிறிய உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் கேஸ் கசிவு காரணமாக  ஏற்பட்ட தீ விபத்தில் 80க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமடைந்தன. கடைகள் சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட  வியாபாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நீண்ட கால கடனுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் வியாபாரிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி  வியாபாரிகள் கடைகள் சேதமடைந்த இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்களுக்கு  புதிதாக கடைகள் கட்டி தர வேண்டும் என ேகாரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து வியாபாரிகளின் கோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மார்க்கெட்  வளாகத்தில் சேதமடைந்த கடைகளுக்கு பதிலாக புதிதாக கடைகள் கட்ட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த  ஜூலை மாதம் பூமி பூஜை போடப்பட்டது. தொடர்ந்து கட்டுமான பொருட்கள் வரவழைக்கப்பட்டு கடைகள் கட்டும் பணிகள்  துவக்கப்பட்டது. தற்போது முதற்கட்டாக முன்புறமுள்ள கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இவை கட்டி முடிக்கப்பட்டப்பின் அடுத்தத்தடுத்த கடைகள் கட்டப்பட உள்ளன. ேசதமடைந்த பகுதியில் 86 கடைகள்  கட்டப்பட்டு வியாபாரிகளுக்கு வழங்கப்படும். மேலும் அந்த பகுதியில் மழை நீர் தேங்காத வகையில் வடிகால் வசதிகளும்  ஏற்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : shops ,Ooty Municipal Market ,Ooty Municipal Market Construction , Damaged ,fire,Ooty, Municipal ,Market
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி