×

இ-பாஸ் கட்டாயமாக்கியும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வர இ-பாஸ் கட்டாயம் என்ற போதும், வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள்  வருவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் இம்மாத இறுதி  வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் தேவை என்ற நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நீலகிரிக்கு  சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதுவும் மருத்துவம் உள்ளிட்ட அவசிய தேவைகளுக்கு மட்டும் இ-பாஸ் கலெக்டர்  அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே வெளி மாவட்டத்தை சேர்ந்த பலர் காலையில் புறப்பட்டு வந்து மாலையில்  திரும்பும் வகையில் ஒருநாள் மட்டும் என அவசர தேவை என கூறி இ-பாஸ் பெற்று நீலகிரிக்கு சுற்றுலா வருவது  அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும், சுற்றுலா பயணிகள் வர  துவங்கியுள்ளனர். இதன் காரணமாக ஊட்டி நகரில் வெளி மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் அதிகம் உலா வருவதை காண  முடிகிறது. ஊட்டி நகருக்கு வெளியில் உள்ள சிறு காட்டேஜ்கள், ஓட்டல்களில் அறைகள் எடுத்து தங்குவதாகவும்  கூறப்படுகிறது. இதன் காரணமாக நீலகிரியில் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடிய அபாயம் நீடிக்கிறது.



Tags : Nilgiris , Mandatory, e-pass, Tourists , Nilgiris
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...