×

கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் வறண்டு கிடக்கும் நாற்றங்கால்: கொள்ளிடம் பகுதி விவசாயிகள் கவலை


கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் நாற்றங்கால் வறண்டு கிடக்கின்றன.  இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான தெற்கு ராஜன் வாய்க்கால், புது மண்ணியாறு மற்றும் பொறை வாய்க்கால் ஆகிய  முதன்மை வாய்க்கால்களும் அதில் இருந்து 300க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களும் பிரிந்து சென்று விவசாய நிலங்களுக்கு  வருடம் தோறும் பாசன வசதி அளித்து வருகிறது. இந்த வருடத்திற்கு கொள்ளிடம் கடைமடை பகுதி விவசாயிகள் குறுவை நெல்  பயிர் சாகுபடிக்கு மேட்டூர் தண்ணீரை நம்பி பயிர் செய்ய காத்திருந்தனர். ஆனால் மேட்டூர் அணை திறக்கப்பட்டு 50 நாட்களுக்கு பிறகு பிரதான வாய்க்கால்களில் குறைந்த அளவே வந்த தண்ணீர்  பெரும்பாலான கிளை வாய்க்கால்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

முதன்மை வாய்க்கால்களில் ஓரளவு வந்த தண்ணீர் பி மற்றும் சி பிரிவு கிளை வாய்க்கால்களுக்கு சென்று சேரவில்லை. இந்த  வகையான கிளை வாய்க்கால்கள் தூர்வாரப் படாததால் பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேரவில்லை. அதனை தொடர்ந்து  விவசாயிகள் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்வதற்கு நாற்றங்கால் தயார் செய்து, அதற்கு நிலத்தடி நீரை மின் மோட்டார் மற்றும டீசல்  இன்ஜின்களை பயன்படுத்தி தண்ணீர் இறைத்து வந்தனர். மேற்கொண்டு மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீர்  நாற்றங்காலை பராமரிக்கவும் அதனைத் தொடர்ந்து சம்பா நடவு செய்யவும் பயன்படும் என்று காத்திருந்தும் விவசாயிகள்  ஏமாற்றத்தையே சந்தித்து வருகின்றனர்.

இதனால் கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு நிர்ணயிக்கப்பட்ட ஏக்கர் பரப்பளவு குறைந்து விட்டது. அதேபோல் கிளை  வாய்க்கால்களில இதுவரை தண்ணீர் சென்று சேராததால் சம்பா நெற்பயிருக்கு தயார் செய்துள்ள நாற்றங்காலை பாதுகாக்கவும்  ,அதனை அடுத்து நடவு செய்யவும் சிரமமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பா நெற்பயிரை காப்பாற்ற உடனடியாக  அனைத்து கிளை வாய்க்கால்களிலும் எளிதில் தண்ணீர் வந்து வயல்களில் பாயும் வகையில் கிளை வாய்க்கால்களை போர்க்கால  அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Nursery ,Kollidam , Nursery, water ,branch ,canals
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி