×

சாத்தனூர் அணை வலதுபுற கால்வாய் அருகே பழமையான மரங்களை வெட்டி சாய்க்கும் அவலம்: கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள்

தண்டராம்பட்டு: சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்படும் வலதுபுற கால்வாய்  அருகே வளர்ந்துள்ள பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள்  கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள்  வழியாக, விவசாயிகளின் பாசனத் தேவைக்காக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதன்படி, அணையில் இருந்து  வெளியேற்றப்படும் தண்ணீர் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் பிக்கப் அணைக்கட்டில் இருப்பு வைத்து பிரித்தனுப்ப  படுகிறது.இந்நிலையில், நீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்ந்து போயுள்ளது. எனவே,  பொதுப்பணித்துறை மூலம் கால்வாய் சீரமைப்பு பணிக்காக ₹42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், பிரம்மகுண்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதிகளான  இளையாங்கண்ணி, ராயண்டபுரம் வரை கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, நீர் செல்லும் கால்வாயை  தூர்வாருதல், கால்வாயின் இருபுறமும் வாகனங்கள் செல்லும் அளவிற்கு, தடையாக உள்ள மரங்கள் மற்றும் முட்செடிகளை  அகற்றி பாதை அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், இதற்கான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர், கால்வாயை ஒட்டி வளர்ந்துள்ள பழமையான காட்டுவா  மரம், இலுப்பை மரம், வேப்ப மரம், புளிய மரம், வாதநாராயண மரம் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்களை, பாதை  அமைப்பதற்கு இடையூறாக உள்ளது என கூறி வெட்டி எடுத்து செல்வதாக என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், `நீர் செல்லும் கால்வாய் அருகே மரங்களை வளர்ப்பதற்கு தமிழக அரசு  மரக்கன்றுகளை வழங்குகிறது. அதை பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அலுவலர்களோ, தங்களது  சுயநலத்திற்காக, பாதை அமைக்க இடையூறாக இல்லாத மரங்களையும் சேர்த்து வெட்டுவதற்கு அனுமதிக்கின்றனர்.  மாவட்ட நிர்வாகம் மரங்களை வெட்ட தேவையில்லை, நீர் செல்லும் கால்வாய்களை தூர்வாரி, முட்செடிகளை அகற்றினால்  போதும் என கூறியும் கேட்பதாக தெரியவில்லை என்றனர்.இதுகுறித்து, தென்முடியனூர் பொதுப்பணித்துறை அலுவலரிடம் கேட்டபோது, `நீர் செல்லும் பாதையில் உள்ள கருவேலம்  மரங்கள் மற்றும் செடி, கொடிகளை அகற்றுங்கள், கால்வாய் அருகே வாகனம் செல்லும் அளவிற்கு பாதை அமைப்பதற்கு  இடையூறாக உள்ள சிறு, சிறு மரங்கள் மட்டுமே அகற்றுங்கள் என ஒப்பந்ததாரரிடம் கூறியிருக்கிறோம். ஆனால், அவர்கள்  பழமையான மரங்களையும் வெட்டியுள்ளதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை  எடுக்கப்படும்’ என்றனர்.

மேலும், கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை அலுவலரிடம் கேட்டபோது, `கால்வாய் அமைத்தது முதல் இதுவரை கால்வாய்  தூர்வாரப்படாமல் உள்ளது. இதற்கு முன்பு எத்தனையோ நபர்கள் பணிகளை செய்யாமலேயே வேலை செய்ததாக கணக்கு காட்டி நிதியை சுருட்டியுள்ளனர்.  அப்போது, யாரும் கேள்வி கேட்கவில்லை. தற்போது நாங்கள் முறையாக வேலையை செய்யும்போது தேவையின்றி குற்றம்  சாட்டுவது சரியில்லை’ என்றார்.ஆனால், நீர் செல்லும் கால்வாய் அருகே இடையூறாக உள்ள மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதா அல்லது சுயநல நோக்கில்  தேவையற்ற மரங்களையும் வெட்டி லாபம் பார்க்கப்பட்டுள்ளதா என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம் என சமூக ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளனர்.

Tags : canal ,Sathanur Dam , Sathanur ,near , canal,old , unseen ,works ,officials
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...