மருதூர் அணையில் அமலை செடிகள் அகற்றப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

செய்துங்கநல்லூர்: மருதூர் அணையில் அடர்ந்து கிடக்கும் அமலை செடிகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.தாமிரபரணி நதியில் 7வது அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டில் கீழக்கால் மற்றும் மேலக்கால் மூலமாக  சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. கார், பிசானம், முன்கார் போன்ற மூன்று போகம் விளையும்.  தாமிரபரணியில் கட்டப்பட்ட தடுப்பு அணையில் மிகவும் நீளமான அணைகட்டு இது தான். இந்த அணைக்கட்டில் தேங்கும் அமலை  மற்றும் மணலை அப்புறப்படுத்த 12 மணல் வாரிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை முறையாக பயன்படுத்தாத  காரணத்தினால் அமலை செடிகளை அகற்ற முடியவில்லை. அந்த அமலை செடிகள் மருதூர் கீழக்கால் மற்றும் மேலக்காலில் தேங்கி  கிடக்கிறது. இதனால் தண்ணீர் ஓட்டம் குறைந்து உள்ளது. எனவே இந்த அமலை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னல்பட்டியை சேர்ந்த விவசாயி மருதுவிநாயகம் கூறும் போது, ‘சுமார் 520 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட  பிரமாண்டமான அணைக்கட்டு இது. இந்த அணைக்கட்டு மூலமாக நேரடி மற்றும் குளத்து பாசனம் வழியாக விவசாயம்  நடைபெறுகிறது. மேலக்கால் வழியாக சாத்தான்குளம்  புத்தன்தருவை வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.  கீழக்கால் வழியாக, சிவகளை,பெருங்குளம் உள்பட பல குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இந்த  அணையில் தேங்கிய அமலை செடிகளை அகற்ற நடடிக்கை எடுக்கப்படவில்லை. வைகுண்டம் அணைக்கட்டில் தேங்கும் அமலை  செடியை அகற்ற வைகுண்டம் தாசில்தார் சந்திரன் நடவடிக்கை எடுத்து, அமலை செடியை அகற்றியுள்ளார். அதுபோலவே மருதூர்  அணையில் தேங்கும் அமலை செடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 அமலை செடிகள் மிக அதிகமான தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே இந்த அமலை செடி மூலமாக தாமிரபரணியில்  அதிக தண்ணீரை நீராவியாக வெளியேற்றி கொண்டிருக்கிறது. எனவே தண்ணீரை சேமிக்க அமலை செடிகளை அகற்றுவது மிக  முக்கியம். எனவே உடனடியாக அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று விவசாயிகள்,  பொதுப்பணித்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: