வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா தேர் பவனிக்கு பக்தர்கள் செல்ல தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று மாலை நடைபெறும் தேர்பவனிக்கு பக்தர்கள்  செல்ல அனுமதி மறுத்து, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி  இன்று (7ம் தேதி) நடைபெறும். நாளை(8ம் தேதி) கொடியிறக்கபட்டு விழா நிறைவு பெறும். விழா நாட்களில் வெளியூர், வெளிநாடு,  வெளி மாநிலங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்தின் போது பக்தர்களுக்கு  அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் இல்லாமல் கொடியேற்றம் நடந்தது. தற்பொழுது ஊரடங்கு உத்தரவில்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வருவோர்கள் மூலம் கொரோனா வைரஸ்  தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதால் இன்று (7ம் தேதி) மாலை நடைபெறும் தேர்பவனிக்கு மாவட்ட நிர்வாகம் தடை  பிறப்பித்துள்ளது. இதனால் பக்தர்கள் இல்லாமல் தேர்பவனி நடைபெறுகிறது. நாளை (8ம்தேதி) நடைபெறும் கொடியிறக்கம்  விழாவில் கலந்து கொள்ள பேராலய நிர்வாகத்தினர் மற்றும் மதகுருமார்கள் தவிர மற்றவர்கள் யாருக்கும் அனுமதி இல்லை  என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Stories:

>