பெலாரஸ் அதிபர் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் மின்ஸ்கில் ஆயிரக்கணக்கானோர் பேரணி!!! - லூகாஷென்கோவுக்கு தொடர் நெருக்கடி!

மின்ஸ்க்:  பெலாரஸ் நாட்டின் அதிபர் லூகாஷென்கோ பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுவரும்  போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. பெலாரஸ் நாட்டில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ 80.3 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் அலெக்ஸ்சாண்டர் 6வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்க்கட்சிகள் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது லூகாஷென்கோ பதவி விலகக்கோரி தலைநகர் மின்ஸ்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இணைந்து தொடர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர், ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து இழுத்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. ஒருங்கிணைந்து சோவியத் ரஷ்யாவிலிருந்து 1991ம் ஆண்டு பிரிக்கப்பட்ட பெலாரஸ் தனி ஐரோப்பிய நாடாக அறிவிக்கப்பட்டது.

 இதனையடுத்து அங்கு 1994ம் ஆண்டு முதன் முறையாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ, அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடினார். இந்நிலையில்தான் பொதுத்தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அதிபரை பதவிலகக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>