×

கடந்த 100 ஆண்டுகளில் இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த புதிய தேசிய கல்வி கொள்கையில் உள்ளது : பிரதமர் மோடி நம்பிக்கை!!


புதுடெல்லி:  கடந்த 100 ஆண்டுகளில் இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த புதிய தேசிய கல்வி கொள்கையில் உள்ளது என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘புதிய தேசிய கல்விக் கொள்கை - 2020’ பற்றி விவாதிக்க, மாநில ஆளுநர்களின் மாநாடு இன்று தொடங்கியது. தற்போது அமலில் இருக்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, ‘புதிய தேசிய கல்விக் கொள்கை - 2020’-ஐ மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எனினும், கடந்த ஜூலை 29ம் தேதி, இந்த  கல்விக் கொள்கை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை பற்றி விவாதிக்க அனைத்து மாநில ஆளுநர்களின் மாநாடு இன்று நடைபெறுகிறது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். ‘உயர்கல்வியில் புதிய கல்விக்கொள்கை 2020ன் பங்கு’ என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர். மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கும் நிலையில், காணொலி மாநாட்டில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றுள்ளார்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, புதிய கல்விக்கொள்கை மற்றும் கல்விமுறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. புதிய கல்விக்கொள்கை  மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும். புதிய கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. கல்வி கொள்கையில் பங்கெடுத்துள்ள ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர். கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். கொள்கை வகிப்பதில் கல்வியாளர்கள் கருத்து கூற பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வி முறையில் பங்குண்டு. தேசிய கல்வி கொள்கை வடிவத்தை முடிவு செய்து நாம் முன்னேறி செல்ல வேண்டும்.

கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எது நமது மூளையை சுதந்திரமாக செயல்பட வைக்கிறதோ அதுவே அறிவு.தேசிய கல்வி கொள்கை, நாடு முழுவதும் மிக விரைவில் செயல்படுத்தப்படும்.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள், கல்வி கொள்கையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் தேர்வு சுமையில் இருந்து தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த கல்வி கொள்கையில் உள்ளது.மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களின் கருத்துகள் திறந்த மனதுடன் கேட்கப்படுகின்றன.மாநிலங்களின் கருத்துக்கள், சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வு அளிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டியது நம் அனைவரின் கூட்டு பொறுப்பு, என்றார்.


Tags : Modi , New National Education Policy, Prime Minister Modi, Hope
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...