×

பப்ஜிதடை எதிரொலி: விளையாட முடியாத விரக்தியில் 21 வயது கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை..மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!

நாடியா: பப்ஜிவிளையாட முடியாத விரக்தியில் 21 வயது கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 35 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலையடுத்து இந்திய அரசு முதற்கட்டமாக டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளைத் தடை செய்தது. அதனையடுத்து மேலும் சில செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட இருக்கிறது என்ற தகவலும் வெளியானது. அதன்படி இந்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு சமீபத்தில் தடை விதித்தது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு சீன செயலிகள் மீதான இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பப்ஜி தடையால் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் ஒரு சிலர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருந்ததால், அந்த விளையாட்டை விளையாட முடியாமல் மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பப்ஜி விளையாட முடியாத காரணத்தினால் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாடியா மாவட்டத்தில் புர்பா லால்பூர் பகுதியை சேர்ந்த, ஐடிஐ மாணவரான பிரிதம் ஹால்டர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டனர். விசாரணையில், இரவு நேரங்களில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்ட தனது மகன், கடந்த வாரம் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டது முதலே விரக்தியாக காணப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், உயிரிழந்த இளைஞரின் தாயார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களை கொண்ட கேம் செயலி பப்ஜி.  இந்த கேமிற்கு அதிதீவிர பிரியர்களாக இந்திய இளைஞர்கள் உள்ளனர். இந்த கேமால் பல அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றுள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : college student ,suicide , Pubg, ban, college student, suicide, West Bengal
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை