×

பணிமாறுதல் செய்த நான்கே மாதங்களில் கண்காணிப்பு பொறியாளர்கள் 8 பேரின் டிரான்ஸ்பர் திடீரென ரத்து: நெடுஞ்சாலைத்துறையில் பரபரப்பு

சென்னை: நான்கு மாதங்களுக்கு முன்பு பணிமாறுதல் செய்யப்பட்ட 8 கண்காணிப்பு பொறியாளர்களின் பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 2 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய 8 கண்காணிப்பு பொறியாளர்கள்  மே 14ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் உடனடியாக பொறுப்பை ஏற்கவும் அறிவுரை வழங்கப்பட்டன. ஆனால், பணியிட மாற்றம் செய்யப்பட்ட 8 கண்காணிப்பு பொறியாளர்கள் பொறுப்பு ஏற்கவில்லை. மாறாக, அவர்கள் தொடர்ந்து ரூ.5,300 கோடி செலவில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டிய திட்டப்பணிகளுக்கு அறிக்கை தயார் செய்து, அரசின் ஒப்புதல் பெற்று டெண்டர் விடும் பணியில் வேகம் காட்டி வந்தனர்.

தற்போது அவர்கள் பெரும்பாலான பணிகளுக்கு டெண்டர் விட்ட நிலையில், தொடர்ந்து பொறுப்புகளை ஏற்காமல் இருந்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட 8 பேரின் பணி மாறுதலை ரத்து செய்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் கோதண்டராமன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது: கடந்த மே 14ம் தேதி பணியிட மாற்ம் செய்யப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் பணி மாறுதல் ரத்து செய்து ஆணை வழங்கப்படுகிறது. மேலும், அந்த பொறியாளர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்பு உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவு வழங்கப்படுகிறது.

தற்போது பணியிடத்தின் பொறுப்புகளை ஒப்படைப்பது மற்றும் பணியமர்த்தப்பட்டுள்ள புதிய பணியிடத்தின் பொறுப்புகளை பெற்று திருத்திய உத்தரவு வழங்கப்படுகிறது. அதன்படி, கோவை கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராகவும், சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் கோவை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 14ம் தேதி மாற்றம் செய்யப்பட்ட 8 கண்காணிப்பு பொறியாளர்கள் தங்களது பொறுப்புகளை ஏற்காத நிலையில், அவர்களின் பணி மாறுதலை ரத்து செய்து இருப்பது நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : engineers , Transfer, Four Month Surveillance, 8 Engineers, Transfer, Cancellation, Highways
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி