×

நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு காங்கிரஸ் நிர்வாகி கன்னத்தில் பளார்: உதவி கமிஷனரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகை

அண்ணாநகர்: அரும்பாக்கம் திருவதியம்மன் கோயில் அருகே சிலர் நடைபாதையில் கடைகளை அமைத்து இருந்தனர். இதனால், மழைநீர் வடிகால் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் அப்பகுதியில் நோட்டீஸ் ஒட்டினர். அதை தொடர்ந்து, நேற்று  காலை 9 மணி அளவில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்தனர். இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை மீறி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்க மதுரவாயல் போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராமன் தலைமையில் கோயம்பேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட தலைவரும், அதே பகுதியை சேர்ந்தவருமான க.வீரபாண்டியன் அங்கு வந்து, ‘‘ஊரடங்கால் ஏற்கனவே வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடைகளை அகற்ற வேண்டாம்,’’ என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதனால், வீரபாண்டியன் தரப்புக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராமன், காங்கிரஸ் பிரமுகர் வீரபாண்டியன் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். பின்னர், அவரை தரதரவென இழுத்து சென்று கோயம்பேடு காவல் நிலையத்தில் அடைத்தார்.

இந்த காட்சி  சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த காங்கிரஸ் கட்சினர் 100க்கும் மேற்பட்டோர் கோயம்பேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவரை கன்னத்தில் அறைந்த உதவி கமிஷனரை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும், அராஜ போக்குடன் செயல்பட்ட உதவி கமிஷனர் ஜெயராமனை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், உதவி கமிஷனரின் அராஜ போக்கை கண்டித்து சென்னையில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : executive ,Congress ,removal ,police station ,Assistant Commissioner ,siege , Pedestrian shop, protest against removal, Congress executive slapped on the cheek, assistant commissioner, condemned, police station siege
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்