×

தாம்பரம் மேம்பாலத்தில் திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் பீதி

தாம்பரம்: மேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். தாம்பரம் ரயில் நிலையம் அருகில் இருந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில், ஜிஎஸ்டி சாலை மற்றும் முடிச்சூர் மற்றும் வேளச்சேரி பிரதான சாலைகளை இணைக்கும் விதமாக, ரூ.78.84 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, கடந்த 2011ம் ஆண்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மேம்பாலம் சரியான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள்  அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மேம்பாலத்தில் நேற்று திடீரென 4 அடியில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த மேம்பாலத்தில் ஆங்காங்கே சிறுசிறு பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த மேம்பாலத்தில் சுமார் 4 அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சேதத்தால் மேம்பாலத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே பெரும் விபத்து எதுவும் ஏற்படுவதற்கு முன்னர், சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும்,’’ என்றனர்.

Tags : Tambaram ,motorists , Tambaram flyover, abyss, motorists panic
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...