×

கொரோனா இல்லாத குடும்பத்தை அசிங்கப்படுத்திய மாநகராட்சிக்கு நன்றி: கோவையில் வாலிபர் ஓட்டிய பேனரால் பரபரப்பு

கோவை: கொரோனா இல்லாத எங்கள் குடும்பத்தை கொரோனா இருக்கிறது என கூறி அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு நன்றி என ஹோப் காலேஜ் பகுதியை சேர்ந்த வாலிபர் தன் வீட்டின் முன்பு பேனர் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஹோப் காலேஜ் பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவரது தந்தை கடந்த 31ம் தேதி கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 1ம் தேதி சம்பந்தப்பட்ட வாலிபர் அவரது தங்கை ஆகியோருக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் வாலிபரின் மனைவி மற்றும் மகள், வாலிபரின் தங்கை மற்றும் தங்கையின் மகள் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் அந்த வாலிபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வாலிபர் தனது வீட்டின் முன் ஒரு பேனர் வைத்துள்ளார். அதில், கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள், கோவிட்-19 இல்லாத 4 பேருக்கு, இருக்கு என்ற முத்திரை குத்தி என்னையும் என் குடும்பத்தாரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் என்று அச்சிடப்பட்டிருந்தது. மேலும், பேனரில் தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து அவர்கள் அளித்த நெகடிவ் என்ற ரிப்போர்ட் உள்ளது. இந்த பேனர் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அந்த வாலிபர் கூறுகையில், ‘‘மாநகராட்சி கொடுத்த தவறான தகவலால் நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சல் அடைந்து உள்ளோம். இதனால், இது போன்ற பேனர் வைத்தேன்’’ எனறார். மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது ,‘‘சம்பந்தப்பட்ட வாலிபரின் தந்தை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 1ம் தேதி பரிசோதனை செய்யப்பட்டதில், 3ம் தேதி நான்கு பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அறிகுறி இல்லாத தொற்று என்பதால் விரைவாக அவர்கள் 4 பேரும் குணம் அடைந்திருக்கலாம். இதன் காரணமாக அவர்கள் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்துள்ளது’’ என்றனர்.


Tags : corporation ,Coimbatore , Corona, Family, Ugly Corporation, Thanksgiving, Coimbatore, Youth Driving, Banner Stirring
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...