×

இந்தியாவில் கொரோனா உச்சம் 24 மணி நேரத்தில் 90,000 பேர் பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 90 ஆயிரத்து 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் ஒரு லட்சம் நோயாளிகள் எண்ணிக்கையை எட்ட பல நாட்கள் ஆன நிலையில், தற்போது ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பை எட்டி வருகிறது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று காலை 8 மணி வரை 41 லட்சத்து 13 ஆயிரத்து 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், கடந்த 24 மணி நேரத்தில் 1,065 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் 62 லட்சத்துடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், பிரேசில் 41.23 லட்சத்துடன் 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கும், பிரேசிலுக்கும் 10 ஆயிரம் பேர் மட்டுமே வித்தியாசம். இதனால், விரைவில் இந்தியா 2வது இடத்தில் நிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் பாதிப்பு அதிகரித்தாலும், குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதுவரை 31 லட்சத்து 80 ஆயிரத்து 865 பேர் அதாவது 77.32 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 8 லட்சத்து 62 ஆயிரத்து 320 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இறப்பு விகிதமும் 1.72 ஆக சரிந்துள்ளது. பரிசோதனை செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கி உள்ளது.


Tags : India ,Corona , Corona in India, 24 hours a day, 90,000 people, affected
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...