×

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நீக்கம் எதிரொலி மீன் மார்க்கெட், மட்டன் கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்

* தனி மனித இடைவெளி காற்றில் பறந்தது
* மெரினாவில் குடும்பத்துடன் வந்தவர்கள் திரும்பி சென்றனர்
* திடல்களில் கிரிக்கெட் விளையாட திரண்ட இளைஞர்கள்

சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நீக்கம் எதிரொலியாக நேற்று மீன் மார்க்கெட், மட்டன் கடைகளில் மக்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. தனி மனித இடைவெளி என்பது காற்றில் பறந்தது. மெரினா கடற்கரைக்கு குடும்பம், குடும்பமாக வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். விளையாட்டு திடல்களில் கிரிக்கெட் விளையாட ஒரே நேரத்தில் அதிக அளவிலான இளைஞர்கள் குவிந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஜூலை 5ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வில்லா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

மொத்தம் 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருந்தது.தற்போது தமிழகத்தில் 8ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற 30ம் தேதி வரை இருக்கிறது. தற்போது அமலில் உள்ள 8ம் கட்ட ஊரடங்கில் அதிக அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு முறை என்பது அடியோடு நீக்கப்பட்டது. இதனால் ஞாயிற்றுகிழமையான நேற்று மக்களின் வாழ்க்கை நேற்று வழக்கம் போல இருந்தது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ஒவ்வொருவரும் அசைவ உணவுடன் கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் சென்னை காசிமேடு, பட்டினப்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எம்ஜிஆர் நகர் மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொருவரும் அரசு அறிவித்த தனிமனித இடைவெளியை கொஞ்சம் கூட மதிக்காமல் காற்றில் பறக்க விட்டு மீன்களை வாங்கி சென்றனர். கொரோனா பயம் கொஞ்சம் கூட மனதில் இல்லாமல் நெருக்கடித்து கொண்டு மீன்களை வாங்கி சென்ற காட்சியை காணமுடிந்தது. பலர் மாஸ்க் என்றால் என்ன? என்பதை கூட  மறந்து கூட்டத்திற்குள் சென்றனர்.

இதே போல மட்டன், சிக்கன் கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கும் தனிமனித இடைவெளி கொஞ்சம் கூட கடைப்பிடிக்கப்படவில்லை. ஒரு கிலோ மட்டன் ரூ.850 முதல் ரூ.900 வரையும், சிக்கன் கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரையும் விற்கப்பட்டது. மட்டன், சிக்கன் விலை உயர்ந்திருந்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். வாய்க்கு ருசியாக சாப்பிட ஆசைப்பட்டு மீன் மார்க்கெட்; மட்டன், சிக்கன் கடைகளில் கூட்டத்தில் சிக்கி, கொரோனா வைரஸை வா, வா என்று அழைத்தது போல் ஒவ்வொருவரின் செயல்பாடுகள் அமைந்திருந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

கிரிக்கெட் விளையாட கூட்டம்: மாநகராட்சி உள்பட அனைத்து விளையாட்டு திடல்கள் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேறு. விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள், இளைஞர்கள், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் என்று காலை முதலே விளையாட விளையாட்டு திடல்களை நோக்கி படையெடுத்தனர். அதுவும் திடல்களில் இளைஞர்கள் அணி, அணியாக கிரிக்கெட் போன்ற விளையாட்டை விளையாடினர். குறிப்பாக தி.நகர் சோமசுந்தரம் விளையாட்டு திடல், கோபாலபுரம் விளையாட்டு திடல், மந்தைவெளி விளையாட்டு திடல், கோட்டூர்புரம் போன்ற இடங்களில் கூட்டம், கூட்டமாக நின்று கிரிக்கெட் விளையாடிய காட்சியை காண முடிந்தது.

இவ்வளவு நாட்கள் வீட்டில் முடங்கியதை நேற்று ஒரே நாளில் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடி அவர்கள் சோகத்தை மறந்தனர். அவர்களும் கொஞ்சம் கூட கொரோனா வைரஸ் பரவும் என்பதை பற்றி கவலைப்படவில்லை. இதே போல பூங்காக்களில் காலை நேரத்தில் வாக்கிங் செல்வோர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பிறகு ஒவ்வொருவரும் தங்களுடைய நண்பர்களை பார்க்கில் சந்தித்து நாட்டு நடப்புகள், கொரோனாவில் வீட்டில் முடங்கி கிடந்ததை பற்றி பேசி பொழுதை போக்கினர்.

குடும்பம், குடும்பமாக குவிந்தனர்: கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிமாக கூடும் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரைக்கு செல்ல மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று தடையை மீறி மெரினாவில் குடும்பம், குடும்பமாக மக்கள் வந்து குவிய தொடங்கினர். தொடர்ந்து கடற்கரை போன்ற பகுதிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதனால் கடற்கரை பகுதிகளில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவானது. மால்களுக்கு செல்ல ஆர்வமில்லை: வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நேரங்களில் வணிக வளாகங்கள், மால்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கொரோனா பீதியின் காரணமாக இந்த இடங்களுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், வணிக வளாகங்கள், மால்களில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட காட்சியை காண முடிந்தது.

* கொரோனா வேகமாக பரவுகிறது: ஐசிஎம்ஆர் விஞ்ஞானி எச்சரிக்கை
சென்னையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடியது தொடர்பாக ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நம்ப முடியவில்லை. சென்னை மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள். மாஸ்க் அணியுங்கள். முடிந்த வரை வீட்டில் இருங்கள். கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. சுகாதார அமைப்பு, சுகாதாரதுறை ஊழியர்கள் மற்றும் அனைத்து முன்கள பணியாளர்களும் உங்களுக்காக இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : shops ,Fish Market ,crowd , Sunday, full curfew, fish market, mutton shop, crowded crowd
× RELATED தஞ்சையில் 25 கிலோ எடை கொண்ட ஒரு மீன் ரூ.1.87...