கல்யாண மண்டபம், ஓட்டல்கள், ரெஸ்டாரான்டுகளுக்கு சான்று கட்டாயம்: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்கள், நெடுஞ்சாலை உணவகங்கள், ஓட்டல்கள், விருந்து அரங்கங்கள் நிறுவுவதற்கும், செயல்படுவதற்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சான்று பெற வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருமண மண்டபங்கள், உணவகங்கள், ஓட்டல்கள், நெடுஞ்சாலை உணவகங்கள் மற்றும் விருந்து அரங்கங்கள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி திருமண மண்டபங்கள், உணவகங்கள், ஓட்டல்கள், நெடுஞ்சாலை உணவகங்கள் மற்றும் விருந்து அரங்கங்கள் கடை பிடிக்க வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், அதாவது நீர் பயன்பாட்டில் சிக்கனம், திட மற்றும் திரவ கழிவுகளை மேலாண்மை செய்தல், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974, காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, ஒலி மாசு (ஒழுங்கமைவு மற்றும் கட்டுப்பாடு) விதிகள் 2000, வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி, டீசல் ஜெனரேட்டர்களின் சக்திக்கு தகுந்த உயரமான புகைபோக்கிகள் அமைத்தல் குறித்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வகுத்துள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதை உள்ளாட்சி அமைப்புகள், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகள் கண்காணிக்க வேண்டும்.

எனவே,மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வகுத்துள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதன்படி, திருமண மண்டபங்கள், உணவகங்கள், ஓட்டல்கள், நெடுஞ்சாலை உணவகங்கள் மற்றும் விருந்து அரங்கங்கள் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்) 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்) 1981ன் கீழ் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நிறுவுவதற்கான இசைவாணை மற்றும் இயக்குவதற்கான இசைவாணையை பெற வேண்டும். தவறும் பட்சத்தில், அந்நிறுவனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவும், வழக்கு தொடரவும் மற்றும் சுற்றுச்சூழல் இழப்பீடு தொகையினை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை வாரிய இணைய தளம் www.tnpcb.gov.in-லும் மற்றும் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Related Stories:

>