×

மகாராஷ்டிரா ஒங்க அப்பன் சொத்தா? ரிவால்வர் ராணி சூப்பர் சவால்: 9ம் தேதி வர்றேன் மும்பைக்கு; முடிஞ்சா தடுங்க பார்க்கலாம்

மும்பை: ‘மகாராஷ்டிரா என்ன, அவங்களோட அப்பா சொத்தா என்னா...என்னை வரக்கூடாதுன்னு தடுக்கறதுக்கு அவங்க யாரு? நான் 9ம் தேதி வர்றேன். முடிஞ்சா என்னை தடுங்க பார்க்கலாம்’ என்று பகிரங்க சவால் விட்டுள்ளார் ரிவால்வர் ராணி கங்கனா ரனாவத். யாருக்குன்னு நினைக்கறீங்க, பாலிவுட்டுல அவரோட எதிரிங்களுக்குன்னு நினைச்சா அது தப்பு; யாருமே எதிர்க்க தயாரில்லாத மகாராஷ்டிர சிவசேனா அரசுக்கு. பிரபல இளம் நடிகர் சுஷாந்த் மரணம் குறித்த மர்மத்தை பற்றி சரியான விசாரணை நடத்தவில்லை என்று ஆரம்பம் முதலே கங்கனா குற்றம்சாட்டி வருகிறார். ‘மகாராஷ்டிர அரசுக்கு விசாரணை நடத்த விருப்பம் இல்லை; எதையோ மறைக்க, யாரையோ காப்பாற்ற துடிக்கிறது,’ என்று பகிரங்கமாக அரசை குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமின்றி, தொடர்ந்து சுஷாந்த் மரணம் குறித்த  விஷயத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அரசை விமர்சித்தபடி இருந்தார். இவருடைய டிவிட்டர் கருத்துக்கள் சிவசேனா அரசுக்கு மட்டுமின்றி, கட்சி தலைவர்களுக்கும் பெரும் எரிச்சலை தந்தது; இப்படி ஒரு நடிகை விமர்சிக்கிறாரே...இவரை சும்மா விடுவதா என்று கங்கணம் கட்டி வந்தனர்.  இந்நிலையில், மகாராரஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கடந்த வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ‘மகாராஷ்டிரா அரசு மீது நம்பிக்கை இல்லை என்றால், நடிகை உடனே இங்கிருந்து வெளியேறலாம்; அவர் மும்பையில் காலடி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்தார்.

போதாதா நடிகைக்கு. அடுத்த டிவிட்டரில், ‘அட, மகாராஷ்டிரா என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராகி விட்டதா? அங்கு ஆளும் அரசு தலிபான் அரசா?’ என்று கிண்டல் அடித்தார். இது, சிவசேனா அரசை மேலும் கோபமூட்டியது.  
‘நடிகை தொடர்ந்து அரசை விமர்சித்து வருவதை சகிக்க  முடியாது; அவர் மும்பை வர விட மாட்டோம்’ என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் உட்பட சிலர் வெளிப்படையாக பேசினர். ‘பாஜ கட்சி தான் நடிகைக்கு முழு ஆதரவாக உள்ளது; அவரை தூண்டி வருகின்றனர் சில பாஜ தலைவர்கள்; அவர்கள் தேவையில்லாமல் மாநில அரசியலில் தலையிடுகின்றனர்’ என்றும் உள்துறை அமைச்சர் தேஷ்முக் சாடினார்.

இந்நிலையில், கங்கனா மீண்டும்  நேற்று முன்தினம் டிவிட்டரில், ‘நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். மகாராஷ்டிரா யாருடைய அப்பன் சொத்தும் கிடையாது: மராத்திய மண்ணை காக்க போராடிய பல தலைவர்களின் வியர்வையில் விளைந்தது இந்த பூமி. மகாராஷ்டிரா பூமியில் நான் கால் வைப்பேன். வரும் 9ம் தேதி மும்பை வந்து விமான நிலையத்தில் இறங்குகிறேன். விமான நிலையத்தில் இறங்கியதும் மீண்டும் டிவிட்டரில் படத்தை பதிவிடுகிறேன்; முடிந்தால் தடுத்து பாருங்கள்’ என்று பதிலுக்கு சவால் விட்டுள்ளார். கங்கனாவின் இந்த பதிலடி பாலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவசேனா அரசுக்கு பெரும் சவாலாக அதன் தலைவர்கள் பேசிக் கொள்கின்றனர். 9ம் தேதி என்ன நடக்குமோ என்று பரபரப்பு அதிகரித்து வருகிறது.

* கைதாவாரா கங்கனா?
வரும் 9ம் தேதி கங்கனா மும்பை வருவார் என்று எதிர்பார்ப்பதால் விமான நிலையம் மட்டுமின்றி, பல இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. பாஜ மாநில செய்தி தொடர்பாளர் ராம் கடம் கூறுகையில், ‘‘கங்கனாவுக்கு பாஜ எந்த வகையிலும் ஆதரவளிக்கவில்லை; ஆனால், அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது; அதனால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டியது  மாநில அரசின் கடமை,’’ என்று தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி கங்கனாவை அரசு கைது செய்ய முயற்சிக்குமா என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.ஆனால், இதை பெரிதுபடுத்தாமல் விட வேண்டும் என்றும் சிவசேனா யோசித்து வருவதாக  தெரிகிறது.

Tags : Queen ,Revolver ,Mumbai , Maharashtra, Onga Appan Sottha ?, Revolver Rani Super Challenge, I will be coming on the 9th, Mumbai, Mudinja can be prevented
× RELATED ஆபாச கேள்வி பதிவேற்றத்தால் பட்டதாரி...