×

வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் நாளை முதல் இயக்கம்; துருப்பிடித்து உடைந்த இருக்கைகள்: சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம்

நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நாளை முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வெளி மாவட்ட பஸ்களும் இயக்கப்பட இருப்பதால், பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. தற்போது 8 வது கட்ட ஊரடங்கு அமுலில் உள்ளது. இதில் தாராள தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன் ஒரு கட்டமாக ஏற்கனவே கடந்த 1ம் தேதியில் இருந்து மாவட்டங்களுக்குள் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது. நாளை (7ம் தேதி) முதல் வெளி மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்க இருக்கிறது.

இதையடுத்து கடந்த 5 மாதங்களாக செயல்படாமல் இருந்த வடசேரி பஸ் நிலையம் நாளை முதல் இயங்க இருக்கிறது. வடசேரி பஸ் நிலையத்தில் இருந்த தற்காலிக காய்கறி சந்தை இன்று காலி செய்யப்படுகிறது. நாளை முதல் பஸ்கள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை வெளி மாவட்ட பஸ்கள் அனைத்தும் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்படும். நாளை முதற்கட்டமாக 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட உள்ளன. திருநெல்வேலி, திருச்செந்தூர், உவரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயங்குகின்றன.

பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த 5 மாதங்களாக பஸ் நிலையம் செயல்பட வில்லை. இதன் காரணமாக பஸ் நிலையம் சுத்தமில்லாத நிலையில் உள்ளது. குறிப்பாக இருக்கைகள் அனைத்தும் துருப்பிடித்த நிலையில் உள்ளன. ஆங்காங்கே இருக்கைகள் உடைந்தும், தரை தளம் பெயர்ந்தும் கிடக்கின்றன. குடிநீர் தொட்டிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பஸ் நிலையத்தில் வெறும் கிருமி  நாசினி மட்டும் அடிக்காமல், முழுமையாக சுத்தம் செய்யும் வகையில், இருக்கைகள் சரி செய்யப்பட வேண்டும். தரை தளம் சீரமைக்கப்பட வேண்டும்.

மாநகராட்சியின் அவசர நிதியில் இருந்து இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் மண்டலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில் நாகர்கோவிலில் இருந்து தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பபட்டன. அப்போது வடசேரி பஸ் நிலையத்துக்கு வெளியே இருந்து பஸ்கள் இயங்கின. சுமார் 5 மாதங்களுக்கு பின், நாளை வடசேரி பஸ் நிலையத்துக்குள் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Tags : Vadacherry ,bus stand ,Officers Without Fixing ,Rusty Broken Seats , Vadacherry Bus, Government Buses
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை