தெலங்கானாவில் விபத்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு உயிர் தப்பினார்

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு. இவர் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று காரில் சென்றார். காருக்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்பு வாகனங்களில் போலீசார் வழக்கம்போல் சென்றனர். தெலங்கானா மாநிலம், யாதாத்திரி புவனகிரி மாவட்டம், தண்டுமல்கபுரம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே மாடு ஒன்று திடீரென வந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு வாகன டிரைவர் மாட்டின் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில் சந்திரபாபு உட்பட அவருடன் வந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து யாதாத்திரி புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: