×

மயிலாடுதுறை பகுதியில் கொள்முதல் நிறுத்தம்; 30,000 டன் நெல் மூட்டை தேக்கம்: விவசாயிகள் அவதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியில் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், சுமார் 30,000 டன் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முற்பட்ட குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு 113 நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவ மழையும் குறித்த நேரத்தில் ஆற்றில் தண்ணீர் வந்ததாலும் விவசாயம் நல்ல மகசூலை தந்தது. ஆனால் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருக்காமல் நெல்லை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒரு நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகளுக்குமேல் கொள்முதல் கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. 800 மூட்டை என்பது ஒரு விவசாயிடம் மட்டுமே உள்ள நெல் மூட்டைகளாகும். 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்போது மாதக்கணக்கில் ஆகும். மேலும் கொள்முதல் செய்யும் நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு முறையான வசதி இல்லை. குறிப்பாக ெதாழிலாளர் பற்றாக்குறையால், கடந்த 1 வாரமாக நெல் மூட்டைகள் பிடிப்பதில் தடை ஏற்பட்டு கடந்த 3 தினங்களாக 50க்கும் மேற்பட்ட நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்த மூட்டைகள் 5000 உள்ளது. விவசாயிகள் 10 ஆயிரம் நெல்மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனர். எனவே திருமங்கலம், மணல்மேடு, திருவாளபுத்தூர், இளந்தோப்பு மற்றும் வில்லியநல்லூர் 113 நிலையங்களிலும் சுமார் 30,000 டன் அளவுக்கு நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன. விவசாயிகள் பல நாட்களாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு கண்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Purchase stop ,Mayiladuthurai ,area ,Procurement Stop , Mayiladuthurai, Procurement Stop, Paddy Bundle Stagnation
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...