×

சதுரகிரி கோயில் பகுதியில் கனமழை; நீரோடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க தடை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாணிப்பாறை பகுதியிலுள்ள அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயில் பகுதியில் நேற்று மூன்றரை மணிநேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அனைத்து நீரோடைகளிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தாணிப்பாறை பகுதியிலுள்ள வழுக்கல் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கோயில் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் லிங்கம் ஓடை வழியாக ஆலங்குளம், மாத்தூர்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்லும். நேற்று பெய்த மழையால் லிங்கம் ஓடையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தது. கல்லணை ஆற்றுபாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் ஆகாசம்பட்டி கிராமத்திற்குள் புகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் ராமதாஸ் தலைமையிலான வருவாய்த்துறையினர் நள்ளரவில் கல்லணையாற்று பகுதிக்கு அடைப்பை சரிசெய்தனர்.

இதனால் ஊருக்குள் வெள்ளம் புகுவது தடுக்கப்பட்டது. லிங்கம் கோயில் ஓடையில் தண்ணீர் செல்வதால் வாகனங்களில் தாணிப்பாறைக்கு செல்வது துண்டிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மகாராஜபுரம் வழியாக தாணிப்பாறை சென்று வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு மே மாதத்தில் கோயில் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 9 பக்தர்கள் உயிரிழந்தனர். 2015க்கு பிறகு தற்போது காட்டாற்று வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : temple area ,flooding ,Sathuragiri , Sathuragiri temple, heavy rain, flood
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!