×

தி.மலை அருகே சாதி சான்று இன்றி பழங்குடியின மக்கள் தவிப்பு!!.. மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர்வதில் சிக்கல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை!!!

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சாதி சான்றிதழ் கிடைக்காததால் பழங்குடியின மாணவர்கள் மேல் படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வந்தவாசி அருகே துணையான் குப்பத்தில் மலைகுறவர் இனத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கயிறு திரிப்பது, மீன் பிடிப்பது, முறம் செய்வது உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கிடைக்காததால் இவர்களது குழந்தைகள் மேல் படிப்பை தொடர முடியாமல் சிரமத்திற்கு ஆளாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. சாதி சான்றிதழ் இல்லாததால், பள்ளி படிப்பை முடித்தவுடன் குலத்தொழிலை செய்ய வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுவதாக பழங்குடியின மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மாணவி கூறுகையில், படிப்பு என்பது எந்த காலத்திலும் அழியாத ஒரு செல்வம். அதனை கற்றுக்கொள்ள நாங்களும் விரும்புகிறோம். ஆனால் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிகளுக்கு செல்லும்போது சாதி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஏழைகளாக பிறந்து ஏழைகளாகவே எங்களால் வாழ முடியாது.

இதனையறிந்த அரசு தங்களுக்கு சாதி சான்றிதழை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதே இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் அனைவரும் தடையில்லா கல்வி கற்க முடியும் என்றார் அந்த மாணவி. இதற்கிடையில் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை அரசிடம் ஒப்படைக்க போவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thimalai , T.Malai, caste proof, tribal people, suffering
× RELATED (திமலை) அண்ணாமலையார் கோயிலில்...