×

கொல்லிமலையில் தொடர் மழை; ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

சேந்தமங்கலம்: கொல்லிமலையில், பெய்து வரும் தொடர் மழையால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், கடந்த ஒரு வாரமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொல்லிமலை முழுவதும் சீதோஷ்ண நிலை மாறி சில்லென்று குளிர் காற்று வீசுகிறது. மலைப் பாதை முழுவதும் ஆங்காங்கே மேக மூட்டங்கள் ரோட்டை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே செல்கின்றனர். மழையின் காரணமாக வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, சினி பால்ஸ் உள்ளிட்டவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இருந்தபோதும் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ- பாஸ் கட்டாயம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி கொல்லிமலை வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையால் கொல்லிமலையில் பயிரிடப்பட்டுள்ள மிளகு, காபி, அன்னாசி, கமலாஆரஞ்சு, மரவள்ளி பயிர்களுக்கு போதிய அளவில் தண்ணீர் கிடைத்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். கொல்லிமலையில் பெய்யும் மழை காரணமாக நீர்வழி ஓடை பகுதியில் தண்ணீர் வருவதால் அடிவாரம், காரவள்ளி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பாக்கு விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kolli Hills , Kollimalai, rain, sky Ganga, waterfall
× RELATED கொல்லிமலையில் பலத்த மழை எதிரொலி ஆகாய...