×

சிதிலமடைந்த அரண்மனை, அன்னசத்திரம்; வேலூரில் பாதுகாக்கப்படும் வரலாற்று சின்னங்கள்: மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் புதுப்பொலிவு

வேலூர்: வேலூரில் சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் சின்னாபின்னமாகி அழியும் நிலையில் இருந்த வரலாற்று சின்னங்கள் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் மீட்டெடுக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது வரலாற்று ஆர்வலர்களை ஆறுதலடைய செய்துள்ளது. அருவா வடதலைநாடு என்றும், தொண்டை மண்டலத்தின் பங்களநாடு என்றும், கங்க மன்னன் கன்னரதேவனால் வேலூர் என்றும் குறிப்பிடப்பட்ட வேலூர் மண், பல்லவர்கள், சோழர்கள், முகலாயர்கள், விஜயநகர நாயக்கர்கள், பீஜப்பூர் சுல்தான்கள், மராட்டியர்கள், ஆற்காடு நவாபுகள், ஆங்கிலேயர் என்று தொடர்ந்து பலரால் ஆளப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த ஒரு கலகத்தை முன்னெடுத்து, பிரிட்டானியரின் சிந்தனையில் கலவரத்தை உண்டாக்கிய மண் என்ற பெருமையும் வேலூருக்கு உண்டு. இத்தகைய வேலூர் மண்ணை ஒட்டிய பகுதிகளில் பண்டைய தொன்மை சின்னங்கள் மண்டி கிடக்கின்றன. இதில் முதல் விடுதலை போருக்கு வித்திட்ட வேலூர் கோட்டையும், கோயிலும் மற்றும் வள்ளிமலை, மேல்பாடி, எருக்கம்பட்டு, ஆற்காடு பஞ்சபாண்டவர் மலை என பல இடங்கள் மத்திய தொல்லியல்துறையின் பராமரிப்பில் உள்ளன.

ஆற்காடு டெல்லிகேட் மாநில தொல்லியல்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வேலூரில் பல்லவர், சோழர், மராட்டியர், விஜயநகர நாயக்கர், பீஜப்பூர் சுல்தான்கள் ஆகியோரின் வரலாற்றை தாங்கி நிற்கும் வேலூர் மலைக்கோட்டைகள், கணியம்பாடி களம்பூரான்கோட்டை, சோழவரம், வேப்பம்பட்டு கோயில்கள், பகவதி மலை, பாலாத்துவண்ணான், குரங்குமலை, சிவநாதபுரம், லத்தேரி பைரவர் மலை, கீழ்மின்னல், மேலகுப்பம், சாணார்பண்டை, ஆர்மா மலை, சென்றாயன் மலை என பல்வேறு இடங்களில் உள்ள சமணரின் வரலாற்று தடங்கள், பண்டைய ஓவியங்கள் அமைந்த குகைகள் பாதுகாப்பின்றி அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. இப்பட்டியலில், கி.பி.1646ல் வேலூர் கோட்டையை வசமாக்கிய பீஜப்பூர் சுல்தான் அடில்சாகியின் பிரதிநிதியாக வேலூர் கோட்டையை ஆண்டு வந்த அப்துல்லாகான் மராட்டிய மன்னர் சிவாஜியால் கி.பி.1676ல் வீழ்த்தப்பட்ட பின்னர், அப்துல்லாபுரத்தில் அரண்மனை கட்டி வாழ்ந்து வந்தார். இந்த அரண்மனை முகலாய கட்டிடக்கலையில் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டதாகும். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்த இந்த அரண்மனை நாளடைவில் பொலிவிழந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, புதர்கள் மண்டி காட்சி அளித்து கொண்டிருந்தது. அத்துடன் சென்னை- பெங்களூரு சாலை விரிவாக்கத்தின்போது அரண்மனையின் ஒரு பகுதியும் காணாமல் போனது.

அதேபோல் அதன் எதிரே சாலையின் மறுபுறம், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலுக்கு வரும் மக்கள் தங்கி செல்லவும், வழிபோக்கவர்களுக்காகவும் கி.பி.1789ம் ஆண்டு மே மாதம், வேலூரை சேர்ந்த தாண்டவராய செட்டியார், பொன்னப்ப செட்டியார், முத்துசாமி செட்டியார் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களால் குளத்துடன் கூடிய அன்னதான சத்திரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அடங்கிய கல்வெட்டு பலகையும், கல் தொட்டி, சிவலிங்கம் ஆகியன புதர்களால் சூழப்பட்டு காட்சி அளித்துக் கொண்டிருந்தன. மேற்கண்ட இரண்டு பழங்கால கட்டமைப்புகளையும் கடந்த ஆண்டு வேலூர் விஐடியை சேர்ந்த மாணவர்கள், வேலூர் வரலாற்று ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பார்வையிட்டு அதன் தொன்மையை காக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்று அங்கு ஆய்வு செய்த கலெக்டர் சண்முகசுந்தரம், உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பிலேயே சத்திரம், அதனை சார்ந்த குளத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டார். அதேபோல் அப்துல்லாபுரம் அரண்மனையின் மிச்சமிருந்த கட்டிடத்தையும் புதர்களை அகற்றி அவற்றை பாதுகாக்கும் வகையில் கம்பிவேலியுடன் அதன் தொன்மையையும், எதிரில் உள்ள சத்திரம் மற்றும் குளத்தின் தொன்மையையும் சிறப்பையும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல்கள் அடங்கிய பலகையையும் வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். கலெக்டரின் இந்த நடவடிக்கை வேலூர் மாவட்ட வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் இப்பகுதியை சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் கூடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேலூர் மக்களும், வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : palace ,inn ,monuments ,Vellore ,district administration , Palace, Annasathram, Vellore, Historical Monuments
× RELATED எனக்கு புற்றுநோய் உள்ளது… வீடியோ வெளியிட்ட பிரிட்டன் இளவரசி