ரூ.1 கோடியில் கடற்கரை புதிய பூங்கா பணி தீவிரம்; குட்டி கோவாவாக மாறும் குலசேகரன்பட்டினம்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ரூ.1 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக கடற்கரை பூங்கா கட்டப்பட்டு வருகிறது. இப்பூங்கா பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் கட்டப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்திப் பெற்றதாகும். இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தற்போது மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள உடன்குடி பகுதியில்தான் அனல்மின் நிலையம், துறைமுகம், ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்டவைகள் அமையப்பெறுகின்றன. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் சுற்றுலாத்தலமான மணப்பாடு சிறந்த சூட்டிங் ஸ்பாட்டாகவும் திகழ்கிறது.

இந்நிலையில் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தமிழக சுற்றுலாத்துறை, பூம்புகார், மாவட்ட ஊராட்சி முகமை ஏற்பாட்டில் ரூ.1 கோடி திட்ட மதிப்பீட்டில் சிறுவர்களுக்கான பூங்கா, கார் நிறுத்துமிடம், இ-டாய்லெட் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கடற்கரை பகுதியில் ஏராளமான சோலார் மின்விளக்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன.  தற்போது அமைக்கப்பட்டு வரும் கடற்கரை பூங்காவில் செடிகள் நடப்பட்டுள்ள நிலையில் கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது. மேலும் சிதம்பரேஸ்வரர் கோயில் பகுதியில் சுற்றுலாத்துறையின் சார்பில் தகவல் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. கடற்கரை பூங்கா பணிகள் விரைவில் நிறைவுபெற்று சுற்றுலாப்பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அழகிய கடற்கரை, கடல் அலை தாலாட்டும் கரையோர மணல், அமைதியான இடம், அதை ஒட்டி இந்தப் பூங்கா அமைந்துள்ளதால் பார்ப்பதற்கு குட்டி கோவா போன்று தோற்றமளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தற்போது அமைக்கப்பட்டு வரும் கடற்கரை பூங்கா பகுதியின் அருகேயே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பூங்கா உள்ளது. அவ்வப்போது பராமரிப்பு பணிகள் எனக்கூறி லட்சகணக்கில் செலவழித்து வந்தனர். ஆனால் தற்போது முறையான பராமரிப்பின்றி பூங்காவில் உள்ள கண்காட்சிப் பொருட்கள், சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இதனை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பராமரிப்பதாக கூறி மூடினர். ஆனால் இதுவரை அந்த பூங்காவில் எந்த பணிகளும் நடந்ததுபோல் தெரியவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, புதிய பூங்காவையாவது தினமும் பராமரிக்க ேவண்டும். அப்போதுதான் பூங்கா அமைக்க அரசு ஒதுக்கிய நிதி பயனுள்ளதாக அமையும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரிதும் பயனளிக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

Related Stories:

>