×

மயிலாடுதுறை பகுதிகளில் 30 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் தேக்கம்; கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் தவிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதிகளில் 30 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதிகளில் முற்பட்ட குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு 113 நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவ மழையும் குறித்த நேரத்தில் ஆற்றில் தண்ணீர் வந்ததாலும் விவசாயம் நல்ல மகசூலை தந்தது. கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருக்காமல் நெல்லை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகளுக்குமேல் கொள்முதல் கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. 800 மூட்டை என்பது ஒரு விவசாயிடம் மட்டுமே உள்ள நெல் மூட்டைகளாகும், 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்போது மாதக்கணக்கில் ஆகும்.

மேலும் கொள்முதல் செய்யும் நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு முறையான வசதி இல்லை. கிடங்குகளில் மூட்டைகளை இறக்குவதற்கு போதிய தொழிலாளர்கள் இல்லாததால் நெல்மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகள் பல நாட்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. அதனால் நெல்மூடைகளை கொள்முதல் நிலையத்திலிருந்து எடுத்துச்செல்ல லாரிகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டதால் கடந்த 1 வாரமாக நெல்மூடைகள் பிடிப்பதில் தடை ஏற்பட்டு கடந்த 3 தினங்களாக கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 50க்கும்மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் முற்றிலும் செயலிழந்து நிற்கிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்த மூட்டைகள் 5000 உள்ளது. விவசாயிகள் 10ஆயிரம் நெல்மூட்டைகளை கொண்டுவந்து அடுக்கி வைத்துள்ளனர்.

ஒரு சிலர் 20 தினங்களுக்கும் மேலாக நெல்லை கொண்டு வந்து வைத்துவிட்டு தினந்தோறும் நெல்மூடைக்கு பாதுகாப்பாக நெல்மூட்டைகள் மீதே படுத்துறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையில் நெல்மூட்டை நனைந்தால் அந்த நெல்மூட்டைகளை வெளியில் கொண்டு வந்து கொட்டி காய வைத்து மீண்டும் அதை அடுக்கிவைத்து பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே திருமங்கலம், மணல்மேடு, திருவாளபுத்தூர், இளந்தோப்பு மற்றும் வில்லியநல்லூர் போன்ற 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் தேக்கம் ஏற்பட்டு விவசாயிகள் பல வாரமாக காத்திருக்கின்றனர். மல்லியக்கொல்லையை சேர்ந்த விவசாயி செல்வம் என்பவர் கூறுகையில்,’ இந்த ஆண்டு எந்த தொந்தரவும் இல்லாமல் இயற்கை சீற்றம் இல்லாமல் அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியில் இருந்தோம் ஆனால் அந்த நிம்மதியையும் கெடுத்துள்ளது இந்த கொள்முதல் நிலையங்கள் என்று குமுறுகிறார்.


Tags : Mayiladuthurai , Mayiladuthurai, Paddy Bundles, Purchase
× RELATED விதிகளை தளர்த்தி நெல் மூட்டைகளை வாங்க...