×

பேஸ்புக் நட்பு காதலாக மாறியதால் விபரீதம்; கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது: முதல் திருமணத்தை மறைத்தது அம்பலம்

செய்யூர்: பேஸ்புக் மூலம்  ஏற்பட்ட நட்பு, காதலாக மறியதால்,   இளம்பெண்ணிடம்  திருமண ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த பவுஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் பார்வதி (20). செங்கல்பட்டில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி விலங்கியல்  இறுதியாண்டு படிக்கிறார். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் பார்வதிக்கு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்த நந்தகோபால் (30) என்பவர், பேஸ்புக் மூலம் பழக்கமானார். இவர்களது, நட்பு காதலாக மாறியது.

இதனை பயன்படுத்தி கொண்ட நந்தகோபால், பார்வதியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அடிக்கடி, ஆன்லைன் மூலம் சுமார் ₹2 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். தொடர்ந்து அவர், பணம் கேட்டு, பார்வதியிடம் தொல்லை கொடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நந்தகோபால், பார்வதியை செல்போனில் தொடர்பு கொண்டு, தனக்கு அவசரமாக ₹20 ஆயிரம் தேவைப்படுகிறது. உடனே கூகுள் பே மூலம் பணத்தை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு  பார்வதி, இப்போது என்னால் அவ்வளவு பணம் தர முடியாது என மறுத்தார்.

இதனால், ஏமாற்றமடைந்த நந்தகோபால், நீ இப்போது பணம் தராவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என அவரை மிரட்டியுள்ளார். இதில் பயந்துபோன பார்வதி, தனது தந்தை விஜயனிடம், நடந்த சம்பவங்களை கூறினார். இதுகுறித்து விஜயன், அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, செஞ்சியில் இருந்த நந்தகோபாலை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நந்தகோபாலுக்கு ஏற்கனவே திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் இருப்பதும், அதனை மறைத்து பார்வதியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, அடிக்கடி பணம்  பறித்தை ஒப்பு கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Disaster ,college student ,money laundering teenager , Facebook friend, college student, money laundering teenager, arrested
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...