×

செங்கல்பட்டு அருகே பரபரப்பு: கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம், காந்தலூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்குகிறது. இங்கிருந்து செங்கல்பட்டு மற்றும் சென்னையின் பல  பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் ஜல்லி, எம் சாண்ட் எடுத்து சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், குவாரியில் இருந்து அதிகளவில் பாரத்தை ஏற்றி கொண்டு, அதிவேகமாக ஊருக்குள் லாரிகள் செல்வதால், சாலைகள் சேதமாவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை ஏராளமான லாரிகள், புலிபாக்கம் கிராமத்தில் ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு வேகமாக சென்றன. இதை கண்டதும், பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், சாலையில் திரண்டு, அவ்வழியாக சென்ற லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு தாலூகா போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, பொதுமக்கள் லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் சாலைகள் சேதம் அடைகின்றன. அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சில இறப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இதனை தடுக்க, லாரிகளை ஊருக்குள் இயக்காமல் மாற்றுப் பாதைகளில் அனுமதிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல், பழவேரி, ஆனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள், எம் சாண்ட் ஆகியவற்றை ஏற்றி கொண்டு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் திருவானைக்கோயில், கலியப்பேட்டை, காவிதண்டலம், ஒர்காட்பேட்டை வழியாக சென்னைக்கு செல்கின்றன.

இதனால், தார்சாலைகள், ஒர்காட்பேட்டை பாலம் கடும் சேதமடைந்து வருகிறது. விபத்துகளும் அதிகரிக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், நேற்று காலை, ஒர்காட்பேட்டையில் சென்ற கல்குவாரி லாரிகளை மறித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, ஒர்காட்பேட்டை வழியாக செல்லும் லாரிகள் அதிகபாரம் ஏற்றி சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பாதுகாப்புடன் இயங்கிய வாகனங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (45) என்பவர், கடந்த வாரம், கல்குவாரி லாரி மோதி தலை நசுங்கி இறந்தார். இதை கண்டித்து இப்பகுதியில் கல்குவாரி லாரிகளால் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தற்காலிகமாக கிராமத்திற்குள் லாரிகள் செல்வதை நிறுத்தினர். இந்நிலையில் திருமுக்கூடல் கிராமம் வழியாக நேற்று, போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மீண்டும் சென்றன. இதை கண்டு ஆத்திரமடைந்த மக்கள், மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் லாரிகளை மறித்து, ஊருக்குள் வர அனுமதி இல்லை என கூறி திருப்பியப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest ,Chengalpattu ,Calcutta Lorry , Chengalpattu,: Calcutta Lorry, Public Struggle
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது