×

அமைச்சர்கள் பேசக்கூடாது என்று பாஜ தலைவர் முருகன் கட்டளை போடுவதா?... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: அமைச்சர்கள் பேசக்கூடாது என்று பாஜ தலைவர் எல்.முருகன் எங்களுக்கு கட்டளை போடக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தமிழக அரசின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 149வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை ராஜாஜி சாலை, துறைமுக வளாகத்தில் அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், மாபா.பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் ரசிகர்கள், அவரை எம்ஜிஆரை போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டி சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். கப்பல் ஓட்டியவர்களெல்லாம் வ.உ.சி. ஆகிவிட முடியாது.

மீசை வைத்தவன் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது. செஞ்சி கோட்டையை ஏறியவன் எல்லாம் ராஜாதேசிங் ஆகிவிட முடியாது. எம்ஜிஆர் என்பது அவர் மட்டும்தான். அதேபோல்தான் ஜெயலலிதாவும். அவர்கள் 2 பேர் இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. அமைச்சர்கள் கூறும் கருத்தை ஏற்க முடியாது என்று பாஜ மாநில தலைவர் எல்.முருகனும், தேசிய செயலாளர் எச்.ராஜாவும் பேசி இருக்கிறார்கள். அமைச்சர்கள் பேசக்கூடாது என்று கட்டளை போடக்கூடாது. அப்படி சொல்வதற்கு இவர்கள் யார்? எங்களை பொறுத்தவரையில் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கிறோம். நூல் அளவுக்கூட தர்மத்தை நாங்கள் மீறவில்லை. கூட்டணியில் இருந்து கொண்டு கருத்துகள் சொல்லலாம்.

ஆனால், அந்த கருத்துகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். விமர்சனங்கள் அதிகமாக வரும்போது வாய்மூடி இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது ஒரு சில கருத்துகளை சொல்லக்கூடிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம்.
நாங்கள் யார் காலையும் மிதிக்கமாட்டோம். அப்படி நம்முடைய காலை மிதித்தால் அவர்களை விடவும் கூடாது. இதுதான் எங்கள் தாரகமந்திரம். கூட்டணியில் இருப்பவர்கள் தார்மீக பொறுப்பு, கடமை, தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். கூட்டணி குறித்து கட்சி முடிவு செய்ய வேண்டிய விஷயம். அமைச்சர்கள் யாரும் முடிவு செய்ய முடியாது. எந்த நிலையையும் எதிர்கொள்ள அதிமுகவும், அதன் தொண்டர்களும் தயாராக இருக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுகதான் என்ற நிலையை நிரூபிப்போம். குரூப் 4 பதவிகளில் காலியாக மொத்தம் 9,500 பணியிடங்களுக்காக தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தியது. இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 6,500 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 3,000 பணி இடங்களான ஸ்டெனோ டைப்பிஸ்ட் மற்றும் டைப்பிஸ்ட்டுகளுக்கு கலந்தாய்வு நடத்த முயற்சித்தபோது கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அந்த பணிகள் தடைபட்டது. தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கி விட்டது. எனவே அவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி விரைவில் கலந்தாய்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா ஒரு பொருட்டே இல்லை
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது, ஆரம்பிக்காமல் போவது அவருடைய விருப்பம். அவர் உண்டு. அவருடைய ரசிகர்கள் உண்டு. அவரை நம்பி இருக்கிற தொண்டர்கள் உண்டு. சசிகலா இந்த மாதம் இறுதியிலோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ சிறையில் இருந்து வெளியே வரப்போவதாக தகவல்கள் வருகிறது. சசிகலா சிறையில் இருந்து வெளியில் வருவாரா, வரமாட்டாரா என்பது சட்டத்தின்படிதான்  இருக்கும். அவர் வந்தாலும், வராவிட்டாலும் அதை பொருட்டாக கருதவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Tags : Murugan ,Jayakumar ,ministers ,BJP , Ministers, BJP leader Murugan, Minister Jayakumar
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...