தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் 12 பேர் அதிரடி மாற்றம்: 2 உளவுத்துறை துணை கமிஷனர்கள், வருண்குமாருக்கு டம்மி பதவி

சென்னை: தமிழகம் முழுவதும் 12 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், சென்னை மாநகர உளவுத்துறை துணை கமிஷனர்கள் 2 பேரும் மாற்றப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் எஸ்பியாக இருந்த வருண்குமாருக்கு டம்மியான பதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக உள்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கூடுதல் எஸ்பியாக இருந்த கிருஷ்ணராஜ், பதவி உயர்வு பெற்று வடசென்னை போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த டி.கே.ராஜசேகரன், சென்னை தலைமையிட துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த விமலா, உளவுத்துறை(பிரிவு 1) துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த திருநாவுக்கரசு, டிஜிபி அலுவலகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த சாம்சன், சென்னை ஐகோர்ட் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை ஐகோர்ட் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக இருந்த சுந்தரவடிவேல், திருப்பூர் நகர தலைமையிட துணை கமிஷனராகவும், சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஐகோர்ட் வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு உதவி ஐஜியாக இருந்த ஸ்ரீதர்பாபு, சென்னை உளவுத்துறை(பிரிவு 2) துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த டாக்டர் சுதாகர், சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஐகோர்ட் வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு உதவி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருண்குமார், கணினி மயமாக்கல் பிரிவு எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த முத்தரசி, சிபிசிஐடி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் எஸ்பியாக இருந்த பர்வேஸ்குமார், சென்னை ரயில்வே எஸ்பியாக இரு நாட்களுக்கு முன்னர் மாற்றப்பட்டிருந்தார்.

தற்போது அந்தப் பதவி ரத்து செய்யப்பட்டு, தர்மபுரி மாவட்ட எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த ராஜன், ரயில்வே எஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் உளவுத்துறையில் துணை கமிஷனர்களாக இருந்த டாக்டர் சுதாகர், திருநாவுக்கரசு ஆகியோர் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டு, டம்மியான பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே நீண்ட காலமாக உளவுத்துறையில் இருந்தவர்கள். இவர்களது மாற்றம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், ராமநாதபுரத்தில் நேர்மையாக செயல்பட்டு வந்த எஸ்பி வருண்குமார், பாஜக தலைவர்களுக்கு டிவிட்டரில் விளக்கம் கொடுத்ததற்காக அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் கணினி மயமாக்கல் பிரிவு எஸ்பியாக டம்மியான பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில், அரசியல்வாதிகளிடம் சென்று தனக்கு குறிப்பிட்ட பதவிதான் வேண்டும் என்று கேட்காமல் இருக்கும் எஸ்பி சுந்தரவடிவேல், தொடர்ச்சியாக டம்மியான பதவியிலேயே நியமிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு தற்போது சென்னை ஐகோர்ட் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் பதவியில் இருந்து திருப்பூர் நகர தலைமையிட துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் போலீஸ் அதிகாரிகளின் பதவி மாற்றங்கள் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. இந்த மாற்றங்களும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.

Related Stories:

>