×

வக்கீல்கள் கோட், கவுன் அணிய வேண்டாம்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா தொற்றை பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நீதிமன்றத்தில் வழக்கிற்காக ஆஜராக வரும் வக்கீல்கள் கருப்பு கோட், கவுன் அணிந்து வர வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக மார்ச் 25 முதல் சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டும் விசாரணை நடந்தது. இந்நிலையில், செப்டம்பர் 7ம் தேதி முதல் உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆஜராகலாம் என்றும் வழக்கு விசாரணை உள்ள வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து, நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகள் நேரடி விசாரணையை நடக்கவுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும் வக்கீல்களின் உடையில் தளர்வை அறிவித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வக்கீல்கள் கருப்பு கோட், கருப்பு கவுன் அணிந்து ஆஜராக தேவையில்லை. வெள்ளை சட்டை அணிந்து கழுத்தில் நெக் பேண்ட் அணிந்தால் மட்டும் போதுமானது என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக வக்கீல்கள் கருப்பு கோட் மற்றும் கருப்பு கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளித்து கடந்த மே மாதம் 14ம் தேதி இந்திய பார் கவுன்சில் பிறப்பித்த நிர்வாக உத்தரவை பின்பற்றுமாறு உயர் நீதிமன்ற வக்கீல்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Tags : Lawyers , Lawyers Code, Gown, Icord
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...