×

தூத்துக்குடியில் இருந்து கட்டாய திருமணத்திற்காக கடத்தப்பட்ட சிறுமி மீட்பு: வாகன தணிக்கையில் அரூர் போலீஸ் மடக்கியது

அரூர்: தூத்துக்குடியில் இருந்து, வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, சிறுமியை அரூர் போலீசார் மீட்டனர். தூத்துக்குடி அடுத்த கொங்கரகுறிச்சியை சேர்ந்த, 17 வயது சிறுமி பிளஸ் 2, படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்த சிறுமியை, பழனியப்பாபுரத்தை சேர்ந்த உறவினர் முத்து (23) என்பவர் கடைக்கு செல்லலாம் எனக்கூறி, காரில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் காரில் இருந்து சிறுமியை கீழே இறக்கி, வலுக்கட்டாயமாக வேறொரு வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்றார்.  சிறுமி மாயமானது குறித்து அவரது தாய் ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், முத்துவை தேடிவந்தனர்.

இந்நிலையில்,நேற்று முன்தினம் விடியற்காலை தர்மபுரி மாவட்டம் அரூர்-திருவண்ணாமலை சாலை, செல்லம்பட்டி பிரிவு ரோடு அருகே, அரூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கை ஏற்றிக் கொண்டு வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த சிறுமி தன்னை கடத்திச் செல்வதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, வாகனத்தில் இருந்தவர்களை போலீசார் அரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், சிறுமியை கடத்தி வந்த அவரது அத்தை மகன் முத்து மற்றும் உதவியாக வந்த அவரது தந்தை திரவியம், (55) 17 வயது தம்பி, டிரைவர் திருவண்ணாமலையை சேர்ந்த ராஜா (47) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும், சிறுமியை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று கோயிலில் முத்துவுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தது அம்பலமானது. தொடர்ந்து, சிறுமி மீட்கப்பட்டது குறித்து அவரது பெற்றோருக்கும், ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கும், அரூர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Tags : Recovery ,Thoothukudi ,vehicle search , Thoothukudi, forced marriage, abducted girl, rescue, vehicle search, Arur police recovered
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...