×

அமெரிக்க ஸ்டைல் பாதுகாப்புடன் மும்பை இந்தியன்ஸ் பயிற்சி!

அபுதாபி: கொரோனா பரவலை தடுக்க அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து சங்கம் (என்பிஏ) கடைபிடிப்பது போன்ற மின்னணு பாதுகாப்பு நடைமுறைகளை பயன்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி மேற்கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணி அபுதாபியில் முகாமிட்டுள்ளது. ஆக.21ம் தேதி அபுதாபி போய் சேர்ந்தவர்கள், ஒரு வாரகால தனிமைப்படுத்துதல், கொரோனா சோதனைகளுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிசிசிஐ வழிகாட்டுதலின்படி தனிநபர் இடைவெளி, தினமும் உடல் வெப்பம் சோதனை, நாடித்துடிப்பு சோதனைகள் செய்யப்பட்டு பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். முன்னதாக உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள விண்ணப்ப படிவங்கள் கொடுத்து தினமும் பூர்த்தி செய்யச் சொல்கின்றனர். கூடவே புளூடூத் வசதியின் மூலம் வீரர்களை பிசிசிஐ கண்காணித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து சங்கம், கொரானா சூழலில் ஜெர்மனியின் மின்னணு சாதன உதவியுடன் வீரர்கள், பணியாளர்களின் உடல்நிலையை கண்காணிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதற்காக கையடக்க கருவியை வீரர்களின் கைகளில் கடிகாரம் போன்று கட்டிக்கொள்ள வேண்டும் அல்லது  அடையாள அட்டை போன்று கழுத்தில் கட்டி தொங்க விட்டுக் கொள்ளலாம். அது அனுமதிக்கப்பட்ட எல்லையை தாண்டும்போது, தனி நபர் இடைவெளியை மீறும்போது எச்சரிக்கை செய்யும். வீரர்களின் உடல் வெப்பம், இதயத்துடிப்பு, சுவாசத்தன்மை உள்ளிட்ட உடல்நிலை மாற்றங்களையும் கண்காணிக்கலாம்; முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். தலை முதல் கால் வரை: அதுபோன்ற சாதனங்களை மும்பை இந்தியன்ஸ் அணியும் பயன்படுத்தி உள்ளது.  

அதனால் வீரர்களையும், ஊழியர்களையும் பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து கண்காணித்து வருகிறது. இது குறித்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கும், உடல் நலத்துக்கும்  அதிக முக்கியத்துவம் தருகிறோம். கட்டாய தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு அபுதாபி வரும்போது எல்லோருக்கும் தலை முதல் கால் வரை மூடும் பாகாப்பு கவச உடைகள் அணிய வைத்தோம். இங்கு பயிற்சியின் போதும் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வீரர்களின் நலனை கண்காணித்து வருகிறோம்’ என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணியினர் தங்கியுள்ள இடத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு பெரிய அறையை வீரர்களின் பொழுதுபோக்கிற்காக சமீபத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொழுதுபோக்கு, விளையாட்டு உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளது. அவ்வப்போது இசைக்குழுகளின் நிகழ்ச்சியும் நடக்கும். அந்த அறையும் நவீன கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கூடவே 10ஆயிரம் சதுர அடியில் சொந்தமாக உடற்பயிற்சிக் கூடத்தையும் அணி நிர்வாகம் நிறுவியுள்ளது.

Tags : American ,Mumbai Indians , American Style, Defense, Mumbai Indians, Training!
× RELATED காங்கிரசின் வங்கிக் கணக்குகள்...