காதலி திசை மாறியதால் ஆத்திரம் புதிய காதலனை தீர்த்துக்கட்ட நண்பர்களை அனுப்பிய வாலிபர்: 4 பேர் கைது; நீலாங்கரையில் பரபரப்பு

துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் நீலாங்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பைக்கில் வேகமாக வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் திரும்பி சென்றனர். அவர்களை போலீசார் விரட்டியபோது, சாலை தடுப்பில் பைக் மோதி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள  மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது 2 பேரும் தங்களது ஆடைக்குள் பட்டாக்கத்தியை மறைத்து வைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், 2 பேரையும் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த வெங்கடேசன் (21), திருவான்மியூரை சேர்ந்த சூர்யா (19) என தெரியவந்தது. பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த வினோத் (22) மற்றும் பெருங்குடியை சேர்ந்த முகேஷ் (19) ஆகியோர், அக்கரை பகுதியில் ஒருவரை கொலை செய்ய தங்களை அனுப்பியதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், வினோத், முகேஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, வினோத் கூறியதாவது: நானும், ஒரு பெண்ணும் காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களாக அந்த பெண் என்னை ஏமாற்றிவிட்டு நைனார்குப்பத்தை சேர்ந்த வெற்றி என்பவரை காதலிக்க தொடங்கினார்.

இதனால் மனமுடைந்தேன். பலமுறை என் காதலியை விட்டு விலகுமாறு வெற்றியிடம் கூறினேன். அவர்கள் தொடர்ந்து காதலித்தனர். காதலியை பிரிய முடியாத ஏக்கத்தால் வெற்றியை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக என் நண்பர்களான வெங்கடேசன் மற்றும் சூர்யாவை தயார் செய்து, வெற்றியை கொலை செய்ய அனுப்பினேன். ஆனால், அதற்குள் போலீசாரிடம் அவர்கள் சிக்கிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து வினோத், அவரது நண்பர்கள் வெங்கடேசன், சூர்யா, முகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 பட்டாகத்திகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>