×

விமான நிலைய சர்வதேச முனையத்தில் டூட்டி ஃப்ரி ஷாப்கள் மீண்டும் திறப்பு: மது விற்பனை தொடங்கியதால் வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின் வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளில், சுங்கத்துறை வளாகத்தையொட்டி வரி இல்லாத அங்காடிகள் (டூட்டி ஃப்ரி ஷாப்கள்) உள்ளன. இங்கு, சாக்லெட், பிஸ்கட், வாசனை திரவியங்கள், சிகரெட்கள், வெளிநாட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவைகளை பயணிகள் மட்டுமே வாங்க முடியும். வெளியாட்கள் வாங்க முடியாது. ஒரு பயணி அதிகபட்சம் 2 மதுபாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும். அதே நேரத்தில் அந்த பயணியின் பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் எண்களை குறித்துக் கொள்வார்கள். பொருட்கள் தரமாகவும், வரி இல்லாததாலும் வெளி மார்க்கெட்டை விட விலைக் குறையாக இருக்கும்.

அதோடு வெளிநாடுகளில் இருந்து சாக்லெட், வாசனை திரவியங்களை வாங்கி வந்தால் விமானத்தில் லக்கேஜ் எடை அதிகரித்து கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், வெளிநாட்டுக்கு சென்று வரும் பயணிகள் இந்த அங்காடிகளிலேயே மேற்கண்ட பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். ஊரடங்கால் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதியில் இருந்து இந்த அங்காடிகள் மூடப்பட்டன. மீட்பு விமானங்கள் இயங்க தொடங்கியதை தொடர்ந்து மே 15ம் தேதியிலிருந்து இந்த அங்காடிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

சென்னைக்கு மீட்பு விமானங்களில் வரும் இந்தியர்கள் பலர் இங்கு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இவர்கள் தனிமை வார்டில் குடித்துவிட்டு ரகளைகளில் ஈடுபட்டதால், ஜூன் 2வது வாரத்திலிருந்து மீண்டும் இந்த அங்காடிகள் மூடப்பட்டன. தொடர்ந்து அங்காடிகள் மூடப்பட்டதால், அங்கு வைக்கப்பட்டு இருந்த சாக்லெட்கள், பிஸ்கட்கள் காலாவதி தேதி முடிந்து குப்பை தொட்டியில் வீசும் நிலை ஏற்பட்டது. இதனால், சர்வதேச முனையத்தின் வருகை பகுதியில் உள்ள இந்த அங்காடிகளில் ஒரு சிறிய கவுன்டர் அமைத்து, சாக்லெட், பிஸ்கட்களை மட்டும் 90 சதவீத தள்ளுபடி என்று கூவிக்கூவி விற்றனர்.

ஆனால், மீட்பு விமானங்களில் வரும் இந்தியர்கள் நேராக வீட்டிற்கு செல்ல முடியாமல், 14 நாட்கள் தனிமை வார்டுக்கு செல்வதால், வீட்டிற்கு செல்வதற்குள் தேதி காலாவதியாகிவிடும் என்று வாங்குவதில்லை. இதனால், அங்காடிகள் மூடப்பட்டன. இம்மாதம் முதல் தேதியிலிருந்து வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வரும் பயணிகள் அவரவர் வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து சென்னை சர்வதேச முனையத்தில் உள்ள இந்த 2 அங்காடிகளும் திறக்கப்பட்டு, சாக்லெட், பிஸ்கட், வாசனை திரவியங்கள், சிகரெட்கள், வெளிநாட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்தவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மதுபானங்களை இங்கு வாங்கிச் சென்றனர்.

Tags : travelers ,Airport International Terminal ,Dooty Free Shops ,start , Airport, International Terminal, Duty Free Shops, Reopening, Liquor Sale, Overseas Pleasure
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை