×

திருப்போரூர் கந்தசாமி, ஆளவந்தான் கோயில்களின் ரூ.60,000 கோடி சொத்து அபகரிக்க முயற்சி: யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது; அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் கோயில்களுக்கு சொந்தமான ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ரியல் எஸ்டேட் தரப்பினர் சிலரும், அரசியல் கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த சொத்துக்களை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று திருப்போரூர் சார் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசாமி  கோயில் மற்றும் ஆளவந்தான் கோயிலுக்கு சொந்தமாக சுமார் ரூ.60 ஆயிரம் கோடியில் 2000 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்துக்களை அபகரிக்க 20க்கும் மேற்பட்ட குழுக்கள் முயற்சி செய்து வருகின்றன. ஒரு சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கோயில் சொத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

எனவே, இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்தி கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்யவும், அதன் அறிக்கையை தாக்கல் செய்யவும் வருவாய்த்துறை செயலருக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் ஜெகன்நாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், இந்த 2 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவிட்டு அது தொடர்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக வருவாய் துறை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும். இடைக்கால அறிக்கையில், சர்வே எண், எவ்வளவு சதுர அடி நிலம், கடந்த 10 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ்கள், பட்டா, சிட்டா, ஏ ரிஜிஸ்டர், அடங்கல், நிலத்தின் வகைபாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கவேண்டும் என்றும் வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல, சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் ஆவணங்களை தாக்கல் செய்ய திருப்போரூர் முருகன் கோயில், ஆளவந்தான் கோயில் செயல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்யவோ, வில்லங்க சான்றிதழ் வழங்கவோ கூடாது என்று தமிழக பத்திரப்பதிவு துறை ஐ.ஜி., திருப்போரூர் சார் பதிவாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தேரஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் வகையில், ஒரு வாரத்துக்கு தற்போதைய நிலைய தொடரவேண்டும். செப்டம்பர் 10ம் தேதி வரை இந்த 2 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்ய பத்திரப்பதிவு துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் வருவாய்துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

* மாயமான 40 தர்ம சத்திரங்கள் 400 ஏக்கர் நிலங்கள்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் புகழ்பெற்ற முருகன் கோயி 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது சிதம்பரசுவாமிகளால் கட்டப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு 13 ஆதீனங்கள் இந்த கோயிலை நிர்வகித்துள்ளனர். இந்த கோயிலுக்கு சொந்தமாக சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் சொத்துகள் உள்ளன. திருப்போரூரில் மட்டும் 680 ஏக்கர் நிலமும் 64 தர்ம சத்திரங்களும் உள்ளன.

* இந்த கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கும் வகையில், ஒரு வாரத்துக்கு தற்போதைய நிலையே தொடரவேண்டும்.
* வரும் 10ம் தேதி வரை இரண்டு கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்ய பத்திரப்பதிவு துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

* ஐடி நிறுவனங்களுக்கு பெயர் மாற்றி விற்பனை
திருப்போரூர் கந்தசாமி கோயிருக்கு அதே ஊரில் 2.51 ஏக்கர் நிலம் குறிப்பிடத்தக்கது. இதற்கு உரியவராக, வருவாய்த்துறையின், நில உடமை மேம்பாட்டு திட்ட, ‘’அ’’ பதிவேட்டில், பட்டா எண் மூன்றில், வள்ளி தேவஸ்தானம் என பதிவாகி, பத்திரப்பதிவிலும் கோயிலுக்கு உரியதாகவே தொடர்கிறது. இதேபோல், திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் தனியார் தொழில் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக தாரை வார்க்கப்பட்டுள்ளன.

போலி ஆவணம் மூலம், நிறுவனம் மற்றும் தனிநபர் பெயரில், பட்டா பெறப்பட்டுள்ளது. கோயிலுக்கு சொந்தமான தரிசு நிலத்தை ஒரு நிறுவனம் பிறரிடம் வாங்கியதாக, போலி ஆவணம் தயாரித்ததாக கூறப்படுகிறது. நில உரிமைதாரராக, ‘’அ’’ பதிவேட்டில் கந்தசுவாமியார் சேர்ந்த வள்ளியம்மன் கோயில் என குறிப்பிடப்பட்டுள்ளது. வள்ளியம்மன் கோயில் என பதிவாகியுள்ள நிலையில், இந்நிலம், கந்தசுவாமி கோயிலுக்கே உரியது. இதேபோல்தான் கோவில் சொத்துக்கள் பதிவேடுகளில் உள்ளன.

Tags : High Court ,Thiruporur Kandasamy ,state ,No one , Thiruporur Kandasamy, Alavanthan Temple, Rs.
× RELATED ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு...