×

5 மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்த நடைமுறை: விமானிகளுக்கு மீண்டும் போதை பரிசோதனை

புதுடெல்லி: விமான பயணத்துக்கு முன்பாக போதை பொருட்களை பயன்படுத்தி இருந்தால் கண்டுபிடிப்பதற்காக, விமானிகளுக்கும், விமானப் பணியாளர்களுக்கும் மீண்டும் சுவாச பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான விதிமுறைகள் சட்டத்தின்படி பயணம் தொடங்கும் 12 மணி நேரத்துக்குள் விமானி மது அருந்தியிருக்கக் கூடாது. மது மட்டுமின்றி, வேறு எந்தவிதமான போதைப்பொருளும் பயன்படுத்தியிருக்கக் கூடாது. இதை உறுதி செய்வதற்காக சுவாச பரிசோதனை செய்த பிறகே, விமானிகள் பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சோதனையில் மது அல்லது போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், 3 வருடங்கள் வரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார்கள். விமான ஊழியர்களுக்கு வழக்கமாக நடக்கும் இந்த மது போதை பரிசோதனை, கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விமானப் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி இருப்பதால் மீண்டும் இந்த சோதனை தொடங்குகிறது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மார்ச் 29 முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவாச பரிசோதனை மீண்டும் தொடங்குகிறது.

இந்த பரிசோதனை விமானிகளுக்கு மட்டுமின்றி, விமானத்தில் பணிபுரிகிற அனைவருக்கும் மேற்கொள்ளப்படும். அதன் பிறகே விமானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இது, உள்நாட்டு விமான சேவையில் பணிபுரிகிறவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு மேற்கொள்ளப்படும். சர்வதேச விமான சேவையில் ஈடுபடுகிற பணியாளர்கள், விமானிகளுக்கு 100 சதவிகிதம் முழுமையாக மேற்கொள்ளப்படும்.’ என கூறப்பட்டுள்ளது.



Tags : pilots , Pilot, drug test
× RELATED ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!!