மூணாறு அருகே நிலச்சரிவில் பலியான 65 தொழிலாளர்களுக்கு ரூ3.50 கோடி நஷ்டஈடு

திருவனந்தபுரம்: மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான தமிழகத்தை சேர்ந்த 65 தொழிலாளர்களுக்கு ரூ.3.50 கோடி நஷ்டஈடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம், மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்தன. பேரிடர் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் மண்ணுக்கடியில் இருந்தும், அருகில் உள்ள ஆற்றில் இருந்தும் பல சடலங்கள் மீட்கப்பட்டன. கடந்த 20ம் தேதி வரை 65 உடல்கள் கிடைத்தன.

ஆனால், 21, 22 ஆகிய தேதிகளில் உடல்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, 23ம் தேதி மூணாறில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 2 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் 25ம் தேதி நடந்த மீட்புப்பணியிலும் உடல்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, மீட்புப்பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தாசில்தார் பினு ஜோசப் தலைமையிலான வருவாய்த்துறை சிறப்பு குழு, இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசனிடம் நிலச்சரிவு குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் சேதமடைந்த வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்களால் ரூ88 லட்சத்து 41 ஆயிரத்து 824 அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ3.50 கோடி நஷ்டஈடு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>