×

ஆசிரியர்களால் மட்டுமே முடியும்; பெரிய கட்டிடங்கள், உபகரணத்தால் நல்ல பள்ளியை உருவாக்க முடியாது: நல்லாசிரியர் விருது வழங்கி ஜனாதிபதி பேச்சு

புதுடெல்லி: நாடு முழுவதும் கற்பித்தலில் புதுமைகளை புகுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கிய 47 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வழங்கினார். நாட்டில் மிகச்சிறந்த ஆசிரியர்களில் சிலரின் தனித்துவமான பங்களிப்பை பாராட்டும் வகையிலும், அர்ப்பணிப்பின் மூலம் பள்ளியின் கல்வி தரத்தை மேம்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்தியவர்களை கவுரவிக்கும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கிறது.

இந்த ஆண்டு நாடு முழுவதிலும் சிறந்த கல்வி பணியாற்றிய 47ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் தினமான நேற்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார். விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசுகையில், ‘‘பெரிய கட்டிடங்கள், சிறந்த உபகரணங்கள் அல்லது வசதிகளானது ஒரு சிறந்த பள்ளியை உருவாக்குவதில்லை.

ஆனால், ஒரு சிறந்த பள்ளியை உருவாக்குதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்கள்தான் மாணவர்களின் அறிவுத்திறனுக்கான அடித்தளம் மற்றும் பண்பு நலன்களை உருவாக்குகின்றனர். கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த போதிலும் ஆசிரியர்கள் ஆற்றி வரும் பணி பாராட்டுக்குரியது. கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளும் டிஜிட்டல் கல்வி வசதியை பெறுகின்றன என்பதை நாம் உறுதி  செய்வது அவசியமாகும்,” என்றார்.

கற்றுக் கொடுத்தவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம்
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி, ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘நம் சிந்தனைகளையும், தேசத்தையும் கட்டமைக்க ஆசிரியர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். உன்னதமான முயற்சிகளை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு, இந்த தினத்தில் நமது நன்றியைத் தெரிவிப்போம்,’ என தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.


Tags : teachers ,buildings ,school ,President ,speech , Teacher, Great Buildings, Good School, Best Author Award, President
× RELATED தொலை தூரத்தில் தேர்தல் பணி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு