×

சிவில் பணிகளில் தாமதம், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்; நாட்டின் முதல் புல்லட் ரயில் 2023-ல் ஓடுவது சந்தேகம்தான்: கூடுதலாக ரூ62 ஆயிரம் கோடி செலவாகும்

புதுடெல்லி: மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம், 2023-ல் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் என்ற பெருமையுடன் மும்பை-அகமதாபாத் இடையிலான திட்டம் தொடங்கப்பட்டது. ஜப்பானுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்துக்கு, கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் அடிக்கல் நாட்டினர். ‘மும்பை-அகமதாபாத் இடையிலான 8 மணி நேர பயணத்தை, இந்த புல்லட் ரயில் 2 மணி நேரமாக மாற்றும். இது, விமானப் பயணத்தை விடவும் வேகமாக இருக்கும்’ என்று பெருமையுடன் மோடி தெரிவித்தார்.

புல்லட் ரயில் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஜப்பான் பொருளாதார ரீதியாக பெரிய வளர்ச்சியை எட்டியதையும் நினைவு கூர்ந்தார். இத்திட்டம், மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்பாராத விதமாக வந்த கொரோனாவால், உலகளவில் ஏற்பட்டுள்ள முடக்கத்தால், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இந்த புல்லட் ரயில் பணிகளும் முடங்கியுள்ளன. இதனால், புல்லட் ரயிலுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும், திட்டத்துக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதிலும் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 63 சதவிகித இடங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல், ரயில் நிலையங்கள், பாலங்கள், பராமரிப்பு நிலையங்கள், ரயில்வே பாதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிவில் பணிகளுக்கான ஒப்பந்தங்களும் இன்னும் முடியவில்லை. அகமதாபாத்-மும்பை இடையிலான 508 கிமீ தூரத்தில், 345 கிமீ அளவுக்கு இந்த சிவில் பணிகள் மட்டுமே நடைபெற வேண்டியுள்ளது. இதுபோன்ற பல்ேவறு காரணங்களால், இத்திட்டத்துக்காக முதலில் திட்டமிடப்பட்ட ரூ.1.08 லட்சம் கோடி செலவு, தற்போது ரூ.1.70 லட்சம் கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சிக்கல்களால், 2023க்குள் இத்திட்டத்தை முடிக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், திட்டமிட்டப்படி புல்லட் ரயில் ஓடும் என அதிகாரிகள்  அடித்து கூறுகின்றனர்.

பணமும் காரணம்...
நிலம் கையகப்படுத்துவதிலும், சிவில் வேலைகள் முடக்கத்தாலும் மட்டுமின்றி, ஜப்பானில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதும் புல்லட் ரயில் திட்ட தாமதத்துக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.  

1 புல்லட் ரயில் திட்டத்தின் ஆரம்பக் கட்ட தோராய மதிப்பீடு ரூ.1.08 லட்சம் கோடி.
2 ஆனால், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, நிலம் கையகப்படுத்தும் பிரச்னை உட்பட காரணங்களால் இது ரூ.1.70 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
3 இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடியையும்,  குஜராத், மகாராஷ்டிர மாநில அரசுகள் தலா ரூ.5 ஆயிரம் கோடிகளையும் மட்டுமே வழங்குகின்றன.
4 மீதமுள்ள தொகையை இந்தியாவுக்கு ஜப்பான் கடனாக வழங்குகிறது. இதற்கான வட்டி, 0.1 சதவீதம் மட்டுமே.
5 இந்த புல்லட் ரயில் திட்டத்தின் மொத்த தூரம் 508 கிமீ.

Tags : bullet train ,country , Civil service, bullet train
× RELATED புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது...