×

இயற்கை உணவு மீது சிவகாசி மக்கள் நாட்டம்: கொரோனாவை எதிர்கொள்ள கொள்ளுச்சாறு, முருங்கை சூப்

சிவகாசி: சிவகாசியில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவு வகைகளின் விற்பனை களை கட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வோடு, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கை உணவுகளை உண்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள இயற்கை உணவகங்களில் கபசுர குடிநீர், வெற்றிலை கசாயம், பருத்தி பால், முருங்கை சூப், துளசி சாறு, மாதுளை, பீட்ரூட், கேரட், தேங்காய் பால் ஜூஸ் வகைகள் மற்றும் பச்சைக்கடலை, முளைத்த பயறு வகைகள், கொண்டைக்கடலை உள்ளிட்ட உணவு பொருட்களின் விற்பனை களை கட்டியுள்ளது.

மேலும், ஒவ்வொரு இயற்கை உணவின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு அட்டைகளை கடைகளில் தொங்க விட்டுள்ளனர். தற்போது பெரும்பாலானோர் காலையில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக கொள்ளுச்சாறு , பாலக்கீரைச்சாறு, வல்லாரைச்சாறு, வாழைத்தண்டுச்சாறு, பாகற்காய்ச்சாறு, மணத்தக்காளி கீரைச்சாறு உள்பட ஏராளமான சத்து மிகுந்த பானங்களை விரும்பி பருகி வருகின்றனர். பச்சைக்கடலை, முளைத்த பயறு வகைகள் பெட்டிக் கடைகளிலும் சில்லரை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயற்கை உணவக ஆர்வலர் ஜெய்ராம் கூறுகையில், ‘‘கொரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து இயற்கை உணவு மீது பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

சிவகாசியில் பல்வேறு அமைப்புகள் சார்பாக இலவசமாக கபசுர குடிநீர் இன்னும் வழங்கப்பட்டு வருகிறது. காலையில் நடைப்பயிற்சி சென்று விட்டு வெற்றிலை கசாயம் அல்லது கபசுர குடிநீரை ஏராளமானோர் இயற்கை உணவகங்களில் சாப்பிடுவதை காண முடிகிறது’’ என்றார். 


Tags : Corona ,Sivakasi , Corona, broth, drumstick soup
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!