×

இலங்கை காவல்நிலையத்தில் இருந்து பல கோடி ரூபாய் ஹெராயின் திருடி தப்பிய போலீஸ் கைது: தனுஷ்கோடியில் பிடிபட்டார்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கள்ளத்தனமாக படகில் வந்திறங்கிய இலங்கை நபர், முகுந்தராயர்சத்திரம் கடற்கரை பகுதிக்கு நடந்து சென்றார். தகவலறிந்து ராமேஸ்வரம் மரைன் போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த நபர், சிங்கள மொழியில் பேசியுள்ளார். தொடர்ந்து அவரை மரைன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று இரவு முழுவதும் மரைன் மற்றும் மத்திய, மாநில புலனாய்வு துறையினர் நேற்று விசாரித்தனர். இதில், பிடிபட்ட நபர் இலங்கையிலுள்ள சியம்பலன்டுவ பகுதியை சேர்ந்த பிரதீப் குமாரபண்டாரா(30) எனத் தெரியவந்தது.

இதில், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள காவல்நிலையத்தில் பிரதீப் குமாரபண்டாரா போலீசாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது போலீசாரால் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை திருடி தனது சகோதரரான அனுரகுமாராவிடம் விற்பனை செய்ய கொடுத்துள்ளார். தகவலறிந்து இலங்கை போலீசார்,  அனுரகுமாராவை கைது செய்து அவரிடம் இருந்து போதைப்பொருளை மீட்டனர். தலைமறைவான பிரதீப் குமாரபண்டாராவை தீவிரமாக தேடி வந்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்கவே, இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.  

இதனைத்தொடர்ந்து ராமேஸ்வரம் மரைன் போலீசார், பிரதீப் குமராபண்டாராவின் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், இதுபற்றி இலங்கை காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பில் அலட்சியம்
பாக்ஜலசந்தி கடல் பகுதியில் சமீபகாலமாக கஞ்சா, கடல் அட்டை, தங்கக்கட்டிகள் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என புலனாய்வு துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது தனுஷ்கோடி கடற்கரையில் நள்ளிரவில் இலங்கையை சேர்ந்தவர், வந்திறங்கிய சம்பவம் கடலோர பாதுகாப்பில் உள்ள மெத்தனப்போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : hero ,Dhanushkodi ,Sri Lanka Police ,police station ,Sri Lanka , Sri Lanka, heroin, theft escaped police, arrested
× RELATED மழையை தொடர்ந்து வெயில் புழுதி...