×

ஆண்டிபட்டி அருகே இறந்த மூதாட்டியை தற்காலிக கொட்டகையில் தகனம் செய்த கிராம மக்கள்: மயான வசதி இல்லாததால் அவலம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, மாலைப்பட்டி கிராமத்தில் மயான வசதி இல்லாததால், இறந்த மூதாட்டியை தற்காலிகமாக தகரக் கொட்டகை  அமைத்து தகனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சியில் உள்ள மாலைப்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு கிராமத்தில் மயான வசதி மற்றும் எரிகொட்டகை வசதியில்லை. இதனால், இறந்தவர்களின் உடலை திறந்த வெளியில் பொது இடத்தில்  தகனம், அடக்கம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்று மாலைப்பட்டியில் மூதாட்டி ஒருவர் இறந்தார். மழையால் அவரது உடலை தகனம் செய்ய முடியாமல் உறவினர்களும், பொதுமக்களும்  தவித்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து தகரத்தில் தற்காலிக கொட்டகை  அமைத்து இறந்தவரின் உடலை எரித்து தகனம் செய்தனர். மாலைப்பட்டி கிராம மக்கள் கூறுகையில், ‘கிராமத்தில் மயான வசதி இல்லாததால், மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய  முடியாமல் தவித்து வருகிறோம். மயான வசதி, எரிகொட்டகை அமைக்கக் கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை  இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : shed ,burial facilities ,Andipatti , Villagers ,cremate ,grandmother ,temporary, facilities
× RELATED கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால்...