×

பள்ளிபாளையத்தில் கொரோனா பீதி பயணிகள் வருகைக்காக காத்திருக்கும் அரசு பஸ்கள்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம்  நகராட்சியில், கொரோனா பீதியால் பொதுமக்கள்  பொது போக்குவரத்தை தவிர்த்து வருகின்றனர். இதனால்  பயணிகளுக்காக பேருந்து  நிலையத்தில் பஸ்கள் பல மணி நேரம் காத்து கிடக்கின்றன.தமிழகத்தில்  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பொது போக்குவரத்து முடக்கப்பட்டது.  இந்நிலையில், தமிழக அரசு கடந்த 1ம் தேதி முதல்,  நிபந்தனைகளுடன் பொது  போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்ட எல்லையில்  உள்ள பள்ளிபாளையம், காவிரி ஆற்றின்  மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டத்தையே  சார்ந்துள்ளது. ஜவுளி உற்பத்தி, காய்கறி மார்க்கெட், ஜவுளி மார்க்கெட்,  மக்களின் அத்தியாவசிய  தேவைகளை, ஈரோட்டின் மூலமாகவே மக்கள் பூர்த்தி செய்து  வருகின்றனர். தற்போது, பஸ்களை மாவட்டத்துக்குள் மட்டும் இயக்குவதால்,   பள்ளிபாளையம் மக்கள், ஈரோட்டுக்கு செல்ல முடியவில்லை.

அதேபோல் குமாரபாளையம்  பகுதி மக்கள், பவானி மற்றும் ஈரோட்டுக்கு செல்ல  முடியவில்லை. மேலும்,  பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால்,  பல வார்டுகளில் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்தை  மக்கள் புறக்கணித்து வருகின்றனர். குறைந்த அளவு பஸ்கள்  இயக்கினாலும், பயணிகள்  வராததால் காத்து கிடக்கின்றன.இதுகுறித்து  பொதுமக்கள் கூறுகையில், ‘மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்கள் இயக்குவதால்,  பள்ளிபாளையம் பேருந்து  நிலையத்தில் பயணிகளுக்காக பஸ்கள் காத்திருக்கின்றன.  ஆனால், கொரோனா பரவலால் மக்கள் பஸ் பயணத்தை தவிர்த்து டூவீலர்களை   பயன்படுத்துகின்றனர்,’ என்றனர்.

Tags : arrival ,school ,corona panic passengers , Government, buses , arrival ,corona ,panic passengers ,school
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி